த்வனி 207
"ஆண்டவன் சித்தத்துக்கே ப்ராயச்சித்தம் உண்டா என்ன?"
சாஸ்திரிகளின் கீழுதடு கேலி நகையில் வளைந்தது.
"நீங்கள் என்ன அப்போ சாமியாராயிட்டேளா? இப்படியே இந்த இடுப்பு வேட்டியுடனும் தோள் முண்டுடனும் தேசாந்தரம் கிளம்பிட்டேளா? வீட்டுக்குக் கூடத் திரும்பப் போறதில்லையா? இந்த நிலைக்குக்கூடப் பெரியவா ஏற்கனவே பேர் வெச்சிருக்கா, ஸ்மசான வைராக்யம்னு-’
"எனக்கு ஏற்பட்டிருக்கும் விடுதலை வைராக்கியத்திலிருந்துகூடத்தான்."
வாத்தியார் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். வாத்தியாருக்கு சொந்தத்தில் இரண்டு. மாடி வீடுகள் இருக்கின்றன. வாடகை வருகிறது. அவர் பையன் நல்ல உத்யோகத்திலிருக்கிறான். ஆனால் அவர் பையனை நம்பவில்லை.
"இன்னிக்கு ஒரு ஸீமந்த முகூர்த்தத்துக்குப் போயாகணும், இன்னும் எத்தனை நாழி இடக்குப் பண்ணப் போறேள்? உங்களை மாதிரி மனுஷாள் இருக்கிறதால் தான் நம் குலம் இப்படி கூணப்பட்டிருக்கு. வேலியே பயிரை மேய்ஞ்சால் விமோசனம் இருக்கோ? நீங்களே சொல்லுங்கோ!'
நான் ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல என்ன இருக்கிறது? அவரும், அவரை அண்டி வந்தவரும், என்னோடு வந்தவரும் என்னைச் சுற்றி நின்றுகொண்டு என்னை ஒரு வினோதப் பிராணிபோல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சற்று எட்ட, ஒரு புதை மேட்டின்மேல், புல் மெத்தையில் ஒரு தாய் நாய் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருந்தது.