த்வனி 211
என் தாய் உண்மையைக் கண்டு ஓடி ஒளிபவள் அல்ல. எத்தனையோ முறை வயிற்று வலி அவளுக்கு வந்திருக்கிறது. ஆனால் இப்போது வந்ததும் சொல்லிவிட்டாள்: "அம்பி, இந்தத் தடவை நான் பிழைக்கமாட்டேன்" என்று. நள்ளிரவில், முன் பின் அறிகுறியிலாது வலி நேரே வயிற்றில் விழுந்து வெட்டியதும், உடல் இன்னும் விட்டுக் கொள்ளாத இரு துண்டுகளாக அது அது அதனதன் தனிப் போக்கில் படுக்கையில் நெளிகையில், அம்மா வலி பொறுக்காது என்னடா பாவி பார்த்துக் கொண்டிருக்கையேடா, கத்தியிருந்தால் என்னைக் குத்திடேண்டா, உனக்கு மனமில்லாட்டா என்னிடமாவது கொடேண்டா! என்று கெஞ்சிக் கதறி, கத்திக்கத்தி, விடியற்காலை புலம்பல் அடங்கி ஓய்ந்து, ஒருதரம் புரண்டு அசைவற்றுக் கட்டையானதும் சடலத்தினின்று பிரிந்த கடைசி மூச்சுடன் என்னின்று ஒரு பெருமூச்சு கலந்தது.
அப்பாடா! கத்தியைக் கொடுக்காமல் தப்பித்தேன்.
"ஆனால் எனக்கு என் தாய்மேல் அன்பு உண்மையாயிருந்தால், இந்தச் சமயத்தில், நான் கொலையாளியாக அஞ்சியிருக்கக் கூடாது. ஆகையால் அன்பும் ஒரு பூச்சுத்தான். அதன் உண்மையான தன்மை பொய். அம்மா சொன்னது சரி. யாரால்தான் யாருக்கு என்ன பிரயோசனம்? "ஐயோ, தாயும் பிள்ளையும் அது என்ன ஈஷலோ; அப்பளாத்து மாவு மாதிரி! உலகத்தில் இல்லாத அம்மா, உலகத்திலில்லாத பிள்ளை!" என்று என் மனைவியின் கேலியும் சரி.
ஆசை, அன்பு, பாசம், நம்பிக்கை, சடங்கு, ஆசாரம் என்று மேலுக்கு மினுக்குக் காட்டி, உண்மையில் பயத்தை வளர்த்துத் தனக்கு வேலிகள் நட்டுக்கொண்டே சமூகத்தின் இனித்த பொய்களை உண்டு ஏமாறுவதை விடக் கசந்த உண்மையை விழுங்கி விடமுண்ட கண்டனானால் என்ன? நஞ்சுக்குப் பழக்கிக்கொண்டால் நான் சிரஞ்சீவி.