214 லா. ச. ராமாமிருதம்
கோயில் திருக்குளத்திலே பொம்மனாட்டிங்க படித்துறையிலேதான் கால் களவுவாங்க. நீ பாட்டுக்குக் குளிம்மா, நான் வயசானவன்! பஸ்ஸிலே தள்ளித் தள்ளி இடிச்சுகிட்டு ஒக்காருவாங்க. 'சங்கோசப்படாதே, நீ என் பொண் மாதிரி' பாத்ரூம்லே ராங்ஸைடுலே நுழைவாங்க. ஏண்டா கிளவா! கொட்டையா பொம்மனாட்டி பொம்மை போட்டிருக்கதே'ன்னு கேட்டால், வயசாச்சோன்னோம்மா, கண்ணு தெரியல்லே'ம்பாங்க. ஐயோ, அதையேன் கேக்கறே போ, இவங்க பண்ற அக்ரும்புக்கெல்லாம், இவங்க வயசுதான் இவங்களுக்கு 'அவுட் பாஸ்."
அவனுக்கு இவன் சுருதி.
இடமே ஏதோ ஒரு தினுசில் பரபரத்தது. இவர்கள் தவிக்கும் சண்டைத்தினவின் முறுக்கேற்றம்.
என்மேல் கைவிழுவதற்கு லக்கினம் இன்னும் ஒரு விநாடி அரை வினாடியில் தொங்கிற்று. பகையின் புகைச்சல் சட்டென அப்படிக் கவிந்துவிட்டது.
அப்போது என் சிரிப்புத்தான் என்னைக் காப்பாற்றிற்று என்று இப்போது தெரிகிறது. என் செவியோரம் எஃகுச் சுருள் திடீரெனக் கழலும் குறுகுறுப்புத் தாங்க முடியவில்லை. உடல் ரோமக்கால்கள் அனைத்தும் முள்ளாய் என்னின்று சிரிப்புப் புறப்பட்டதும் எல்லோரும் திகைத்து என்னின்று பின் வாங்கினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் எனக்கே புரிந்தால்தானே! இது என் சிரிப்பாய் எனக்கேயில்லை. இது எனக்கு முன்னாலேயே இருந்து கொண்டிருக்கும் சிரிப்பு. தனக்கே சிரித்துக்கொண்ட சிரிப்பு. அதன் காரணம் அதற்குத்தான் தெரியும். ஆனால் அதில் ஏதோ ஒரு வெறி, குரூரம். சிரிப்பின் உருட்டு ஒவ்வொன்றும் ஒரு முள் சக்கரமாய்த் தெரிந்தது.