த்வனி 221
இதெல்லாம் இன்றைக்கு எனக்குத் தோன்றுவானேன்?
அன்று மாலை, ஏன் அன்றிலிருந்தே நான் வீடு திரும்பவில்லை.
***
ராதையின் புழுக்கமும், அவள் பழியும், என் மெளனமும் சேர்ந்து நிச்சயமாய் என்னை ஏதோ ஒரு முனைமுகம் இழுத்துச் செல்கின்றன. அவள் கிளை தாவிட்டாள். எனக்குத் தாவக் கிளையில்லை. அதற்குப் பதில் என்னைக் கழுவிலேற்றியது போல் என்னை ஊடுருவிவிட்ட வேர்மீது, என்மீது ஒரு விருகம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மனம் ஒரு தோலானால் மனமும் உடல்தான்.
உலகமே உயிரின் கல்லறை.
என்மேல் கற்கள் அடுக்கியாகின்றன.
நான் தனியனாகிவிட்டேன்.
நாளும் கிழமையும் என்னைத் துறந்தன.
***
மறுநாள் மாலை: ராஜு ஆபீசுக்கு வந்தான், விஜியைத் தூக்கிக்கொண்டு.
"அப்பா!" குழந்தை என்னைக் கண்டதும் ஒரு தாவு தாவிவிட்டாள். அப்பம் போன்ற கைகளால் என் முகத்தைத் தொட்டுப்பார்க்கிறாள். அது அவள் சுபாவம்.
நான் மணியடித்து, பாபுவை ஒரு 'ஸெட் டிபனும், இரண்டு காப்பியும் வாங்கிவரச் சொன்னேன். விஜிக்கு ஒரு லாலிபாப்!
அப்படியென்றால் என்னவோ?
ராஜுக்கு முகம் சுண்டியிருந்தது.
"அப்பா என்னை மன்னிச்சிடுங்கோ: இந்த மூன்று வார்த்தைகளை வெளியிட எவ்வளவு ஒத்திகை பார்த்திருப்பான்.