226 லா. ச. ராமாமிருதம்
"அம்மா! அம்மா! தாத்தா நொம்ம நன்னா குத்து விடறார். நீ பாரேன்!"
இவள் இவனுக்குத் தாயாரா? அக்கா என்றாலே பொருந்தும். பையன் முகத்துப்பால் இவள் முகத்தில் இன்னும் காயவில்லை, இவளை எங்கேயாவது பார்த்திருக்கிறேனோ?”
அவள் புன்னகை புரிந்தாள்.
"சேகருக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சுட்டால் போதும், நேரே தலைமேல்தான் சவாரி."
நான் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நின்றேன். இவளை நான் எங்கு பார்த்திருக்க முடியும்?
"தாத்தா குத்து விடுங்கோ தாத்தா! அம்மா பார்க்கணும்"
அவள் அவன் வாயைப் பொத்தினாள்.
"உஷ்! மாமான்னு சொல்லணும் சேகர்!"
அன்றிரவு நான் குளித்துவிட்டு, ஹோட்டலுக்குக் கிளம்ப சட்டையை மாட்டிக் கொண்டிருக்கையில்,
"தாத்-மாம!"
திரும்பினேன்; அறை:வாசற்படியில் சேகர் நின்று கொண்டிருந்தான், கையில் ஒரு தட்டுடன். அதில் ஒன்றன்மேல் ஒன்றாய்க் குவித்த இரண்டு மூன்று பொரித்த அப்பளங்கள்.
"அம்மா கொடுத்துட்டு வரச்சொன்னாள். ஈர அப்பலாம். இன்னிக்கு இட்டாளாம்."
அவனைத் தூக்கிக்கொண்டேன். பையன் இறக்கை மாதிரியிருந்தான்.
“Thank you Sekar! Tell your Mummy I thank her!”