த்வனி 229
இன்றிரவு எனக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் தோன்றிற்று. முற்றிலும் வேடிக்கையுமல்ல; விஷமமானது தான். நான் தனியாக வந்து எம்மட்டும் தனிமையைச் சாதித்திருக்கிறேன் என அறிய ஆவல் கொண்டேன். இன்று என் இரவுச் சாப்பாட்டை இரந்துண்டால் என்ன? பிச்சையெடுக்க மனம் எம்மட்டில் துணிந்திருக்கிறது? ஹோட்டல் டிக்கெட் புஸ்தகத்தையும், பாங்கு புஸ்தகத்தையும், மணிபர்சையும், எதிர் வீட்டு உறவையும், உத்யோக பத்திரத்தையும் இத்தனை தைரியங்களின் கலவையான என் மமதையையும் எம்மட்டில் என்னால் மறக்க முடியும்?
தெருக்களைத் தாண்டி வெகுதூரம் நடந்தேன். வாசல்கள் சில திறந்திருந்தன. பல மூடியிருந்தன. எந்தப் படியை ஏறவும் மனம் துணிந்திருந்தால்தானே! நடந்து நடந்து நாக்குக்கூட வரண்டுவிட்டது. இன்று சோறு இல்லாவிட்டாலும் போகிறது. தாகத்துக்குச் சோதனையாக ஒரு சோடாக் கடைகூடத் தென்படவில்லை. நான் இப்போது அலையும் இடத்தில் தெருவிளக்குகூடச் சரியாக எரியவில்லை. விட்டு விட்டு அணைந்து ஏற்றிக்கொள்கிறது. வழி தப்பிவிட்டதோ? சந்தேகம் வந்து விட்டது. முன்னிலாவில் வெள்ளைத் துணி போர்த்த ஒரு உருவம் தெரிந்தது. சற்றுத் தயங்கி நின்றேன்.
திண்ணையில் சாய்ந்திருந்தவர் சட்டென எழுந்து உட்கார்ந்தார்.
"யாரைத் தேடறீங்க? வாங்க, வாங்க-உட்காருங்க-உட்கார்ந்து பேசுங்க-"-
"நான்-நான்-எனக்கு"
விழிகளில் எரிநீர் உறுத்திற்று. இது கோபமா? அவமானமா?? பயமா??? உலகில் பிச்சை புகுந்த அத்தனை. ஆண்டுகளின் அடையாளத் துயரமா????