பக்கம்:அவள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 231


இருக்கு'ன்னு. என்ன இவரு இப்படிச் சொல்றாரே, நேரமாவுதே. நான் யோசனை பண்ணிட்டிருந்தேன்... நீங்களும் வந்தீங்க. ஆனால் இவர் கிட்டே எனக்கு இது ஒண்ணும் அதிசயமில்லிங்க. இவரு இப்படி ஏதாவது சூசனையா சொல்வாரு சொல்றபடியே நடக்கும்."

இவர்களிடம் எனக்கு அச்சமாயிருந்தது. பேச்சை மாற்ற, "குழந்தைகள் எல்லாரும் துாங்கிவிட்டார்களா?" என்று கேட்டேன்.

"கொளந்தைகளா?" அவள் கணீரென்று சிரித்தாள். "கடவுள் எண்ணம் வெக்கலீங்க. ஆனால் நாங்கள் அதைப்பத்திக் கவலைப்படல்லீங்க. இவர்தான் எனக்குக் கொளந்தை. நான் தான் அவருக்குக் கொளந்தை, எழுந்துட்டீங்களா? நேரமும் ஆவுது. சரி, போய் வாங்க...?"

கையும் பிடியுமாய் அகப்பட்டும், மன்னிக்கப்பட்ட திருடன்போல் நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

சோதிப்பவன்தான் உண்மையில் சோதிக்கப்படுபவனும்.

***

இவளை எங்கோ பார்த்த மாதிரி நினைவில் ஏதோ இடறுகிறது. ஆனால் நிச்சயமாய் இவளை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. பார்த்திருக்கவே முடியாது.

இவர்கள் மூவர் மேலும் புரியாத சோகச்சாயை படர்ந்திருக்கிறது. இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ நல்ல கவிதையைப் படித்தபின் நெஞ்சில் அதன் வண்டலாய்த் தங்கும் கிலேசம் இறங்குகிறது. குளிர் தாங்காது ஒன்றுடன் ஒன்று ஒடுங்கிக்கொள்ளும் சிட்டுக் குருவி ஜோடியை நினைவூட்டுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/275&oldid=1497871" இலிருந்து மீள்விக்கப்பட்டது