232 லா. ச. ராமாமிருதம்
இவள் எவ்வளவு சிறுகூடாய் இருக்கின்றாள்! இவ்வளவு குறுகிய வயிறு எப்படிச் சேகரின் கருவைத் தன்னில் அடக்கிச் சுமந்தது?
-இது எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி! சுமந்து தானே சேகர் உருவாகி வெளிவந்து பம்பரம் விளையாடுகிறான். தவிர இது என் கவலையா? இது எண்ணத்தின் அக்கப்போரன்றி வேறு என்ன?
அவர்கள் வீட்டில் செய்யும் பலகாரங்கள்-ஏன் சில சமயங்கள் அவள் கணவன் வாங்கி வரும் பொட்டலங்களில்கூடப் பங்கு பையன் மூலம் வரும்.
மறுக்கவும் முடியவில்லை. ஒரு தடவை திருப்பியனுப்பியதற்கு அவளே நேரே வந்துவிட்டாள். "ஏன் நான் கொடுத்து நீங்கள் வாங்கிக்கக்கூடாதா?" இதற்கென்ன பதில் சொல்ல முடியும்? தட்டை ஜன்னலில் வைத்துவிட்டுச் சென்றாள்.
இன்னொரு சமயம் 'தலைவலி' உடல் சுகமில்லை, என்று தட்டிக் கழிக்க முயன்றேன். அவ்வளவுதான். ஏன் சொன்னேன் என்று ஆகிவிட்டது. உடனே மாத்திரை, வெந்நீர், கஷாயம், மிளகுரசம் என்று எதை எதையோ துக்கிக்கொண்டு இருவருமே வந்துவிட்டனர். அந்தப் பொய்யிலிருந்து கெளரவமாய்த் தப்புவதே பெரும் பாடாய்ப் போய்விட்டது.
சிறுமீன் போட்டுப் பெருமீன் பிடிக்கிறார்களோ என்று நான் கவலையுறும்படி அவர்கள் என்னிடம் கடன் கேட்கவில்லை. ஒரு தயவையும் எதிர்பார்க்கவில்லை.
மனிதன் எப்பவும் சந்தேகப்ராணி.
ஒன்று இல்லாவிட்டால் ஒன்று ஏதோ ஒரு தாக்ஷண்யச் சுழியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம்.