பக்கம்:அவள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 லா. ச. ராமாமிருதம்


மூன்று மாதங்களுக்குப்பின், முற்றிலும் எதிர்பாராத சமயத்தில், "நான் வரலாமா?’ என்று கேட்டுக் கொண்டே. திடீரென்று அவள் அப்படித் தோன்றியதும் அவளைப் பார்க்க, சினேக பாவனையில் அவளை வரவேற்க சந்தோஷமாய்க்கூட இருக்கிறது.

"என்ன அப்படிக் கேட்கிறாய்? வா, வா."

"ஆமாம், நம் வீட்டில், நம் வீடாகையால் நம் வீடு என் வீடுகூட. ஆனால் இது உங்கள் இடமாச்சே! இங்கு அனுமதியில்லாமல் நுழையலாமா?"

அவசரமாய்த் தலையணைகளை உதறிவிட்டு ஜமக்காளத்தை விரித்தேன். உட்காருமுன் அவள் கண்கள் அறையின் நாற்புறத்தையும் துழாவின. அவள் மூக்கு நுனி சுருங்கிற்று. என்னையும் ஒருமுறை கண்ணோட்டம் விட்டாள்.

"ஐயாவுக்கு வெளிவாசம் ஒன்றும் வனவாசமாயில்லை, உடம்பு சிவப்பிட்டிருக்கே!"

"நான் அப்போ கறுப்பா என்ன?"

"ஓ! என் கறுப்பை நீங்கள் இப்படி ஞாபகப்படுத்தித் தானாகணுமோ?"

"இல்லை நானா தேடிக்கொண்டதுதானே! இல்லை உனக்குக்கூட கறுப்பு உதிர்ந்துதானிருக்கிறது. இடுப்பில் ஒரு 'டன்லப்' உருவாகிக் கொண்டிருக்கிறதே?"

"ஒண்ணுமில்லே..." அவசரமாய் அந்த இடத்தைப் புடவையால் மூடிக்கொண்டாள். "எங்களுக்கே நாற்பது வயதுக்குமேல் அப்படித்தான்.”

"நீ கொழுப்பைக் குறைத்துக்கொள்ள வேணும், வீட்டில் தினம் சப்பாத்திக் கிழங்கு நடந்துண்டிருக்கோன்னோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/278&oldid=1497516" இலிருந்து மீள்விக்கப்பட்டது