240 லா ச. ராமாமிருதம்
வீட்டில் விட்டப்புறம் எப்போ பார்க்கப் போறேனோ? இது நிச்சயமானதிலிருந்தே மனசு சரியாயில்லே. உங்க கிட்டேயாவது சொல்லிக்கலாம்னு வந்தேன்.”
நான் ஊமையானேன்.
எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளைக் கல்லாக்கிக் கோவிலில் வைத்திருக்கிறது. கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும். ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை.
அவன் போன பின்னரும் நான் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை. எனக்கு இப்போது புரிந்தது இந்தக் குடும்பத்தைச் சுற்றிக் கட்டிய சோக ரேகை, மயிரிழையில் கட்டித் தலைக்குமேல் தொங்கும் கத்தியின் கீழ், இரண்டாவது கர்ப்பப் பயங்கரத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டே வளையவரும் இவர்கள் வாழ்க்கை. ஸ்மரித்த பயம் தரிசனமும் ஆகிவிட்ட பின் இவர்களுக்கு விமோசனம் ஏது? சின்னக் குழந்தைகளின் சொப்பு விளையாட்டுப்போல் ஆகிவிட்டது இவர்கள் குடித்தனம்.
ரயிலடிக்கு வழியனுப்ப நான் சென்றேன். இவர்களுக்குக் கடைசியாக நான் காட்டக்கூடிய தாகூண்யம் இதுதானே! -
அன்றைக்கென்று, ஆபீஸ் வேலை முடியும் தறுவாயில் எதிர்பாராத அவசர ஜோலி ஆகையால், நான் ப்ளாட்பாரத்தில் நுழையும்போதே முதல் மணி அடித்துவிட்டது. பிறகு அவர்கள் ஏறிய பெட்டியைக் கண்டுபிடிக்கச் சற்று நேரம். இப்படித்தானே சிறுகச் சிறுகச் சில விஷயங்கள் சில நேரங்கள் நம் உயிரை உறிஞ்சி விடுகின்றன.
"உங்களைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையையே விட்டுட்டோம்..."