பக்கம்:அவள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 லா. ச. ராமாமிருதம்


"கொஞ்சம் கூட இல்லை.”

"பின்னே?”

"அதுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் உங்களைப் பார்த்தால் அம்மா நினைப்பு வரது."

வண்டி வேகம் எடுத்துவிட்டது.

"உன் அம்மா யார் மாதிரி இருப்பாள்?"

"என் தாய் என் ஜாடைதான்."

எங்கோ டெலிபோன் மணி அடித்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கலாம்.

"உன் அம்மா பேர் என்ன?” அவள் திடீரென புன்னகை புரிந்ததால், நனைந்த கன்னங்களின்மேல் அதன் ஒளி படருகையில் அவளிடம் ஏதோ அமானுஷ்யம் மிளிர்ந்தது.

"அம்மாவின் சொந்தப் பேர் ஒண்ணு. ஆனால் அவள் தனக்கு வெச்சுண்ட பேர் வேறு ஏதோ, புது மாதிரி. அவள் பேர்-"

அவள் சொன்னது இஞ்சினின் பெருமூச்சில் கேட்கவில்லை. வண்டியுடன் நான் ஒடினேன்.

"உன் தாயார் பேர் என்ன?" என்று கத்தினேன். அவளும் உரக்கக் கூவினாள்.

"ஸுநாதனீ"

அந்தத் தருணமே இஞ்சினின் ஊதல் காதைக் கிழித்துக்கொண்டு கிளம்பிற்று. செவிகளைப் பொத்தியபடி நின்றவிடத்தில் நின்றுவிட்டேன். ரயில் என்னைத் தாண்டி இருளில் மறைந்தது.

இப்பொழுது புரிந்தது. இவளை முன்பின் பாராமலே இவளை எங்கோ பார்த்தாற்போல் இவள் நினைவு நெஞ்சில் இடறும் மர்மம். தாயின் குரலின் சாயை பெண்ணிற்கும் கொஞ்சம் அடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/286&oldid=1497562" இலிருந்து மீள்விக்கப்பட்டது