244 லா. ச. ராமாமிருதம்
நீ என்னைத் தின்ற விளைவாய் நான் என்னை இழந்து உன் ஒன்றில் ஒன்றி ஒன்றானேன்.
ஆனால் ஒன்று.
என்னை நீ தின்றதும் உன் வயிற்றில் தங்கியிருந்தேனெனில் நீ என்னை ஜீரணித்திருப்பாய். அப்போது உனக்கு நான் இரையானேன் என்று பொருள் கண்டேன்.
உன் வயிற்றில் தங்காது அங்கிருந்து நேரே உன் விழிக்கு வந்து அங்கு அமர்ந்து அண்டங்களை அகண்டமாய் உன் வாயில் கவ்வி, ஏந்திய வண்ணம் காக்கும் உன் காவலில் உன்னையும் தின்ற உன் குஞ்சானேன்.
இச்சமயம் உன்னோடு காலத்தையும் விழுங்கினேன்.
சென்று போனதற்கும் வந்து நிற்பதற்கும் வரப் போவதற்கும்.
இலக்கணமான அதனதன் சமயமுமாகும் அம்சம்.
நீயலால் எனக்கு ஏது தரும்? I Love you.
***
அது அந்த நாள்.
ஆபீஸில் எனக்கென்று ஒரு அறை, திரும்பும் நாற்காலி, டென்னிஸ்கோர்ட் போன்ற மேசை, தனி டெலிபோன்-ஆபீஸர் பதவிக்கு உயர்ந்த புது முறுக்கு, இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை ஆட்டம் கொடுக்காத நாள்.
எல்லாம் ராஜு பிறந்த ராசி என்று ராதை வருவோர் போவோரிடம் பெருமையடித்துக்கொள்கிறாள். அப்பவே என் தகுதிக்கு என் உரிமையைக்கூட என்னிடமிருந்து ராஜுவின் பிறந்த ராசி மூலம் பறிக்க ஆரம்பித்தாகி விட்டது! ஆனால் அப்போது அப்படிப் படுகிறதா? நானும் அந்தப் பெருமையில் கலந்துகொள்கிறேன்.