த்வனி 249
"Please உன் பெயர் என்ன?”
"இருங்கள் என் பெயர்-ஸுநாதனி."
"ஸுநாதனி?"
"இது எனக்கு இட்ட பேர் இல்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இச்சமயத்திற்கேற்ற பெயர் என்று உங்களுக்குத் தோன்றவில்லை?"
"ஸுநாதனி , உன்னிஷ்டம்.”
"உங்கள் உச்சரிப்பில் என் பெயருக்கு உருவேறுவது எனக்கு இங்கே தெரிகிறது."
"ஸுநாதனி, உன்னால் எப்படி இவ்வளவு அற்புதமாய்ப் பேச முடிகிறது?"
"கேட்பவருக்கும் கேட்பதற்கேற்ற படியும்தான் பேச்சும் வரும். உங்கள் மெளனம் என் பேச்சிற்கு உரைகல்; உங்களுடன் பேசுவதே நான் உரமேறத்தானே!"
"என்ன சுயநலம்!"
"சுயநலமில்லாவிடில் உங்களைத் தேடி ஏன் பேசுகிறேன்"
“என்னிடம் அப்படி என்ன கண்டுவிட்டாய்?"
"அப்படிக் காரணங்கள் கேட்டாலும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் மாலையில் நீங்கள் உங்களுக்கே பாடிக் கொண்டிருப்பதை நான் பின் தெருவில் என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கேட்டேன். கண்டேன். இந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு என்னைத்தேடினால் நான் அகப்படமாட்டேன். நாங்கள் அந்த இடத்தைக் காவி பண்ணிவிட்டோம்."
“My god! உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்?"