பக்கம்:அவள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 லா. ச. ராமாமிருதம்


இன்றும் டெலிபோன் மெளனமாய்த் தானிருக்கிறது. இவளை இந்த நேரத்திற்கு எதிர்பார்க்கப் பழக்கி விட்டேன் என்பதை உணருகையில் எனக்குக் கடுங்கோபம் வந்தது. இன்று நான் தீர்த்துச் சொல்லிவிடப்போகிறேன், உன் கைப்பொம்மையாக இருக்க நான் விரும்பவில்லை என்று-

டெலிபோன் அலறிற்று.

எடுக்கலாமா வேண்டாமா? எடுக்கலாமா வேண்டாமா?

இவன் குரல் ஒலி என்னை எங்கே கொண்டுபோய் விடும்?

இவளிஷ்டப்படியே நான் ஆடினால் என்னைப் பைத்தியம் பிடிக்க அடித்து விடுவாளோ? என் நெற்றியில் வேர்வை அரும்பிற்று. இன்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தாலும் நாளைக்கு மோஹினிப் பிசாசு போல் தொடருவாள். இந்த வேளைக்குப் பதில், எதிர்பாராத வேளையில் பேசுவாள்.

நான் டெலிபோனை எடுக்கையில் முற்றிலும் என் வசத்தில் இல்லை.

"Hello"

"மிஸ்டர் சாலிக்ராம், நாளைக்கு எனக்குக் கல்யாணம். விடை பெற்றுக்கொள்கிறேன்."

மீண்டும் அந்த மறக்க முடியாத வெற்றிச் சிரிப்பு.

டெலிபோனை அந்தப் பக்கம் வைத்தாயிற்று. மூன்றுநாள் சோறு தொண்டையில் விக்கிற்று. பித்து பிடித்தாற்போல் வளைய வந்தேன்.

ஸுநாதனி.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/296&oldid=1497622" இலிருந்து மீள்விக்கப்பட்டது