பக்கம்:அவள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்த பால் 255

ரேணு புத்தியில் அல்லது தேவையான சமயங்களில், உடல் சுறுசுறுப்பில், எள்ளளவும் குறைந்தவளல்லள். சக்திகள் வரவழைத்தாற்போல், உள்ளிருந்து சமயத்துக்கு ஆஜர். ஆனால் அவசரம் என்ன தட்டுக்கெட்டுப் போறது? மணமாகி மூன்று வருடங்களாகின்றன. இன்னும் எதிரும் புதிருமாக இரண்டு பேர்தான்.

ரேணு மறுதாரம். அம்மா காலமான கையுடன், சுற்றியிருந்தவர்கள், இடம் பார்த்து, ஜாதகம் பார்த்து, பாஸ்கருக்கு மணம் செய்து வைத்தனர். மறு வருடமே, முதல் பிரசவத்திலேயே, அவர் மனைவி, தான் ஈன்ற மகவுடன், பூமிக்குத் தன் பாரத்தைக் குறைத்துக்கொண்டு விட்டாள்.

வீட்டில் ஃப்ரிட்ஜ், க்ரைண்டர், மிக்ஸி, gas இத்யாதி நவீன உபகரணங்களுடன் பாஸ்கர் தானே சமைத்து சாப்பிட்டு, உத்யோகத்துக்கும் போய்க்கொண்டு ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இப்படியே எத்தனை நாள் நடத்த முடியும்? என்றேனும் ஒரு நாள் அலுப்புத் தட்டாதா? நேற்றைய குழம்பை, ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்துச் சுடவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்றேனும் அது வாடை காட்டாதா? அதன்மூலம் தன் வாழ்க்கையிலேயே வாடை அடித்துக் கொண்டிருப்பது தெரியாமலா போய்விடும்? எல்லாமே நாமே அடுக்கி மூடி வைத்துக்கொள்கிற சமாச்சாரம்தானே!

அத்துடன் வயதும் ஆகிவிடவில்லையே!

இச்சமயம் அண்டையார் உதவியை அவர் நாடவில்லை. தினசரிப் பத்திரிகையில் 'மணமகள் தேவை' விளம்பரம் கொடுத்தார். கொடுத்ததுதான் கொடுத்தார்-- இத்தனை பதில்களா வரும்? பாஸ்கருக்குச் சிரிப்பு வந்தது. அன்று. மாலை, ஸ்னானம் செய்து, சந்தியாவந்தனம், காயத்திரி ஜபம் எல்லாம் முடித்துக்கொண்டு, குத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/299&oldid=1497832" இலிருந்து மீள்விக்கப்பட்டது