256லா. ச. ராமாமிருதம்
விளக்கை ஏற்றி, வந்த அத்தனை கவர்களையும் அடுக்கி அம்பாள் படத்துக்கெதிரே வைத்துத் தான் கண்ணை மூடிக்கொண்டு, அந்த அடுக்கிலிருந்து ஒரு கவரை எடுத்தார்.
விளைவு
ரேணு கொடுத்து வைத்தாள்.
அப்போது ரேணு ஹாஸ்டலில் இருந்துகொண்டு ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். கொடுத்து வைத்தாள் என்பதில் சந்தேகமா? கணவன் தோற்றத்தில் குறைவா? உத்தியோகப் பதவியில் குறைவா? அவருடைய மேல் அதிகாரிகள் இரண்டு முறை அவரை வெளிநாடு போகக் கோரி, மறுத்து விட்டார். காரணம்? அவருடைய நேம, நிஷ்டை, அனுஷ்டானங்களுக்குத் தடை வரும் என்றுதான்.
போன இடம் எல்லாம் ஸ்னானத்திற்கு காவிரி கிடைக்காது. ஆனால் தினம், கோவில் தரிசனம் பண்ணாமல் அவரால் இருக்க முடியாது. ஹா, ஹூகு என்று சாளிக்ராமம், கல்லுப் பிள்ளையார், ஆராதனை இதெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.
அம்பாள் படத்துக்கு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி, வெள்ளிக்கிழமைதோறும், பாயஸ நைவேத்யம் பண்ணி, அதைக் குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, அனுபவித்தவருக்குத்தான் தெரியும். இதெல்லாம், அதனதன் ஐதீக வாசனையுடன் லண்டனிலோ, நியூயார்க்கிலோ கிடைக்குமா?
No, இந்த தங்கச் சங்கிலியை, அயல்நாட்டு வாசத்தில், சேதப்படுத்திக் கொள்ளவோ, கத்திரித்துக் கொள்ளவோ அவர் விரும்பவில்லை. இல்லை என்று அடித்தே சொல்லலாம். அவரால் முடியாது. சீலம் ரத்தத்தில் அப்படி ஊறிப் போயிருந்தது.