xxxi
பதில் தேடுகையிலேயே, பதில் என்னைத் தேடுவதுபோல் பாசாங்கு பண்ணிக் கொண்டிருக்கிறதா? கிட்டினாற் போல் கிட்டி எட்டச் சிரிக்கிறதும் அதன் சுபாவம் ஒன்றை ஒன்று தட்டாமாலை சுற்றல். அன்று பாலப் பெரியவாளிடம் பேசினபோது, நம் இடையே ஒரு மூன்றாவது ஆள், அதன் உருவத்தில, நம் எண்ணங்கள். பேச்சு, செயல் யாவற்றுக்கும் சாகதியாக மெளனமாகப் புன்னகை புரிந்துகொண்டு நிற்கிறதே, அதுதான் அவளோ?
***
தஞ்சாவூரிலிருந்து லால்குடிக்குப் பஸ்ஸில் போம் வழியில், ஒரு பெரும் வெட்ட வெளியில் ஒரு ராக்ஷஸக் கூடம் விஸ்தீரணத்துக்கு ஏறக்குறைய ஆள் உயர ஆழத்துக்கு, காய்ந்துபோன இளநீர் குடுக்கைகள் மட்டையுடன் குவிந்திருக்கின்றன. எங்கெங்கோ பயிராகி எவரெவரோ ஏதேதோ சூழ்நிலையில் வெட்டிக் குடித்துத் தூக்கியெறிந்து பல்லாயிரக்கணக்கில் இங்கு சேர்ந்திருப்பது வியப்பைத் தூண்டுகிறது. இதே வழி சிந்தனையை ஒடவிடில் ஒவ்வொரு மட்டையும் ஒரு கதை சொல்லும், இதுவும் அவளுடைய விளையாட்டுவிஷமம்தான். எதிலும் அவள் ப்ரஸன்னத்தைக் காணத் தெரிந்துகொண்டால், எதிலும் சுவாரஸ்யம் காண மனதைப் பழக்கிக்கொண்டால் எல்லாம் மனநிலைதான். மனதின் தடம் மாற்றம் தான். அதனால்தான் தேடலுக்கும் அவளுக்கும்-அதாவது நம் ஆசையில் அவளைப் பார்க்கும் பாவனைக்கும் முடிவேயில்லை.
ஆம் பக்தி என்பதே என்ன? அதுபற்றி நிறைய நினைக்கிறேன்; நினைத்துக்கொண்டே யிருக்கிறேன்: பக்தி பண்ணும் பொருள் மேல் நிறைய அன்பு, இன்னும் முழுக்கப் புரியாததால் அதன் மேல் புதுமை, ஆச்சர்யம், லேசான பயம், அந்தப் பொருளை அறியத் தீவிர ஆர்வம்-இத்தனையின் கலவையின் விளைவாய் உள்ள நெகிழ்ச்சி.