பக்கம்:அவள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266லா. ச. ராமாமிருதம்



கணவன் மனைவி இடையே பலப்பரீட்சை முறையில்லைதான். அவளும் அவருடைய அந்தக் கேள்விக்கு, ஒரே கேள்விக்குக் காத்திருந்தாள். இல்லை காத்திருந்தாளா?

அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், உடனே ஒரு நுனியைப் பிடித்து இழுத்தால் அத்தனை முடிச்சுகளும் அவிழ்வதுபோல் புதிர் பிரிந்திருக்கும். இல்லை பிரிந்திருக்குமா?

அவருடைய நடமாட்டத்தை, செயல்களை, அவள் விழிகள் தொடர்வதை, அவர் முதுகைத் துருவுவதை பாஸ்கர் உணர்ந்தார். என்னவோ நேர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் பாஸ்கர் அந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார். தானாகக் கனியாததை தடியால் அடிக்கமாட்டேன்.

பாஸ்கர் மழுங்குணி மாங்கட்டையா? அல்ல அழுத்தக்காரரா? அல்ல. நமக்கேன்பாடு நடைமுறைத் தத்துவத்தின் கடைப்பிடிப்பா? இப்படி இருப்பது சரியில்லை என்று எனக்கே தெரிகிறது. ஆனால் ஏன் இப்படி இருக்கிறேன்? புரியவில்லையே!

சமையல்கட்டு வேலை முடிந்த பின்னர் ரேணு ஒரு தலையணையையும், ஜமக்காளத்தையும் எடுத்துக் கொண்டு பக்கத்தறைக்குச் சென்றுவிட்டாள். இது அவர்களிடையே புதுசு. இது ஒரு சவால்தான் அந்தக் கேள்வியைக் கேட்க, No, I won't. குறுக்கிடுவது வறட்டு கெளரவமா? எலியுடன் பூனை விளையாட்டா? ஈசுவரி நீதான் சஞ்சலத்தைத் தீர்க்கணும்.

நள்ளிரவில் எழுந்து பூஜையறைக்குச் சென்றார். குத்துவிளக்கில் சுடர் முத்தாட்டம் எரிந்துகொண்டு, அசைவற்று நின்று, அது எரிந்த ஒளியின் நிழலாட்டத்தில் அவள், அவளுடைய அற்புதமான மந்தஹாஸ்த்தைப் புரிந்துகொண்டு கண்களை மூடி தவத்தில் இருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/310&oldid=1497859" இலிருந்து மீள்விக்கப்பட்டது