பக்கம்:அவள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272லா. ச. ராமாமிருதம்



சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஆறாம் அறிவு படையாத ஜீவராசிகள் உள்பட, உணர்ச்சியின் அடிவாரத்தினின்று, உயிர் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வடிகாலாக அமைந்த ஒசையின் முதல் உரு 'அம்மா!'

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமமே "ஸ்ரீ மாத்ரு நம!" அது மட்டுமல்ல. இன்னமும் ஒரிரு இடங்களில் ஆதிசங்கரர் இதே நாமத்தைத் திரும்பச் சொல்கிறார். அத்தனை பெரிய கலைஞன், கவி, அவருக்கு அந்த இடங்களில், அதைவிடச் சிறப்பான மாற்றுச்சொல் தோன்றவில்லை என்றே தோன்றுகிறது.

தாயின் அருமை பெருமையை வார்த்தை பூர்வமாகத் தரிசிக்க வேணுமானால் பட்டினத்தாரின் இரங்கலைப் படிக்க வேண்டும்!

 
முன்னையிட்ட தீ முப்புரத்தில்
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றில்

-இதைப் புலம்பலாக நினைக்காதீர்கள். அபசாரம் அபசாரம், அத்தனையும் அம்மாவுக்கு அர்ச்சனை. நெருப்புக்கு நாபி நெருப்பாலேயே ஆஹூதி.

சங்கரர் அம்பாளைக் கேட்கிறார்: "தாயே, ஸ்திரீயில் கெட்டவள் இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டா?”

ஐயா, ஈதெல்லாம் வார்த்தை சாமர்த்தியமில்லை. அம்மாவைப் பற்றி நினைத்தாலே உணர்ச்சி மடை உடையும் நிலை

நம் தெய்வங்களைக் குடும்பஸ்தர்களாகவே ஆவாஹனம் செய்து, அந்த சமுதாய நெறிப்படிதான் வழிபடுகிறோம். சிவன், பார்வதி, பிள்ளையார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/316&oldid=1497886" இலிருந்து மீள்விக்கப்பட்டது