பக்கம்:அவள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 லா. ச. ராமாமிருதம்

வேண்டியதுதான். இஷ்டப்படிதான் படித்துக்கொண்டார்கள். படித்துக்கொண்டோம். முதலில் தாய்க்கும் தகப்பனுக்குமே எந்த அளவுக்குத் தெரியப்படுத்தினாயோ? உனக்கு இங்கேயே கொஞ்சம் இஷ்டராஜாங்கி என்றுதான் பெயர். ஒரு மகவு—அதுவும் பெண், செல்லப் பெண் அல்லவா? உன் அப்பா பெரிய டாக்டர். லயன்ஸ் கிளப் ரோட்ரி சேர்மன். எல்லாவிதங்களிலும் பிரமுகர். ஆனால் அவர் கதியே பிஸிஷியன் ஹீல்தைஸெல்ஃப் என்று ஆகிவிட்டதே!

உண்மை எப்பவுமே காயுள் விதை, மனிதனுள் விந்து போல் ஒளிந்துகொண்டுதான் இருக்கும். அதன் முழுத்தன்மை கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடிப்பதற்கும் இல்லை அது.

ஃபர்னிச்சரை விற்பதாக பேப்பரில் விளம்பரம் கண்டு நான் உங்கள் வீட்டுக்கு வந்த சமயத்தில்தான் நேருக்கு நேர் முகம் பார்த்துக்கொண்டோம். அதை நான் மறக்கவே மாட்டேன். இதோ பார் அமலி. நம்மிடையே நடந்த எதையுமே நான் மறக்கவில்லை. என் நினைப்பெல்லாம் ஒன்வே டிராபிக்தான். ஆனால் புதையல்போல அவைகளை நான் பூதம் காக்கிறேன். இது வெறும் கடிதம் அல்ல. இத்தனை வருடங்களில் என் நினைப்பின் முனைப்பு. நுனியில் பட்டாசுத் திரி பற்றிக்கொண்டு விட்டது. எப்போ 'டுமீல்" எனக்கே பயம். நான் காலிங்பெல்லை அழுத்தி கதவு திறந்ததும் நான் பார்த்த முகம் அரைத்தூக்கம் கலைந்த முகமா? அழுத முகமா? அறியேன். நெற்றிப் பொட்டில் மயிர் பிரி பெரியதாக ஒன்று கலைந்து உள்ளே மின்விசிறிக் காற்றில் அலைந்தது. யெஸ்? .

"மிஷஸ்—?"

"நான் மிஸ்ஸுக்குத் திரும்பியாச்சு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/322&oldid=1497756" இலிருந்து மீள்விக்கப்பட்டது