282 லா. ச. ராமாமிருதம்
✽✽✽
அடுத்தபடியாக நாம் சந்தித்தபோது ஏழெட்டு மாதங்கள், ஏன், ஒரு வருடமே ஆகியிருக்குமோ?
தாஸப்பிரகாஷ் ஐஸ்கிரீம் பார் உள்ளே நுழைந்து நான், ஒரு மேஜையில் உட்கார்ந்துகொண்டேன். ஐஸ்ட் காஃபி என்கிறார்களே எப்படி இருக்கும்? அசடு வழயுமா? மரியாதையாக ஹாட் காஃபியே சாப்பிட்டு விடலாமா?
"ஒ கட்டில் வாங்கும் சிநேகிதரா? என் யோசனை வெடுக்கென்று கலைந்து தலை நிமிர்ந்தால் நீ! என் அழைப்பிற்குக் காத்திராமலே எதிரேயும் உட்கார்ந்து விட்டாய். உனக்கு முகத்தில் தனிச் சிவப்பு. 'கட்டில் வாங்கியாச்சா?"
'ஏன் உலகத்திலேயே உன் ஒரு கட்டில்தானா?',
கொய்ட் ரைட், எத்தனை எத்தனையோ கட்டில்கள். ட்ரபிளும் அதுதான்."
"இல்லை கீழே பாயில் படுத்தால் ஆகாதா?”
"உண்மை, உண்மை. இதைக் கட்டில் வாங்குமுன்பே தெரிந்துகொண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. வாங்கிய பின் உணர நேர்ந்தால் பரிதாபத்திற்குரியவர்."
"டாம் யு!"
உனக்கு எப்படித் தெரிந்தது? எனக்கு தொண்டையடியில் கசந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் எனக்கும் ஸுனோவுக்கும் இடையில் வேஷங்கள் ஒவ்வொன்றாய் படிப்படியாய்க் கலைந்துகொண்டிருந்தன.
எங்களுக்கு எத்தனை எத்தனை முகங்கள்! முகத்தினடியில் அதனடியில் இன்னொரு முகம்.
"என்ன சாப்பிடுகிறீர்கள்?"