பக்கம்:அவள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



துளசி 291

மனுஷா மரியாதையில் அசையாமல் நின்னுண்டிருந்தா. உனக்கு ஏற்பாடு ஆயிண்டிருக்கப்ப ஆத்துல எல்லாரும் அழுதா. ஆனா எனக்கு அழுகை வல்லே. நீ என்ன தூங்கற மாதிரிதானே இருந்தே!

முந்தாநேத்து முதல் நாள் ராத்திரி என்னை சுத்தி திடுதிடுன்னு ஒடறாப்பலயும் அழறாப்போலயும் சத்தம் கேட்டு முழிச்சுண்டு எழுந்து நானும் ரேழிக்கு ஓடி வந்தேன். அப்பத்தான் அப்பா உன் கண்ணை மெதுவா மூடிண்டிருந்தா. "உஷ்...அம்மா தூங்கறா அநாவஸ்யமா இந்த வேளையிலே கலாட்டா பண்ணி அவ நிம்மதியை கலைச்சுடாதீங்கோ." ஆனா அப்படி சொல்றபோதே அப்பாவுக்கு குரல் கம்மித்து. மோவாக்கட்டை நடுங்கித்து.

அதுக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி தாத்தா தெவசம் வந்ததே அப்ப நீ அப்பாகிட்டே சொல்லிண்டிருந்தது நெனவுக்கு வந்தது: "ஆமா நீயும் இருபத்தியாறு வருஷமா தெவசம் பண்ணிண்டு இருக்கே. நீ இறைக்கற எள்ளுக்கும், தண்ணிக்கும்தான் இன்னும் காத்திண்டிருக்காராக்கும். எனக்குத் தோணலைடாப்பா. எங்கையாவது இன்னொரு ஜென்மா எடுத்திருப்பார். ஆனா பெரியவா சொல்லிட்டுப் போயிருக்கா. நாம அவா சொன்னபடி பண்ணிண்டிருக்கோம், அப்படியே பண்ணிட்டுப் போயிடு வோம்!”

அப்பா கோணல் சிரிப்பு சிரிச்சுண்டு "எங்கே பொறந்திருப்பா?”

அப்பா பக்கத்தில் இருந்த என் காதைத் திருகி நீ "ஏன் இந்தக் காலிப் பயலாவே இருக்கக்கூடாது? ஜாடை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு." காதை வலிச்சது. ஆனா என்ன சந்தோஷமாயிருந்தது. ஆமா பாட்டி இந்த தடவை நீ என்ன, தாத்தா தெவசத்தோட நீயும் போயிட்யே. தாத்தா உன்னை அழைச்சுண்டுட்டார்னு இவாள்ளாம் சொல்லிக்கறா. அப்படித்தான் நடக்குமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/335&oldid=1497787" இலிருந்து மீள்விக்கப்பட்டது