பக்கம்:அவள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 லா. ச. ராமாமிருதம

எறும்பில்லேடா. குட்டித்தேள்! நான் பார்த்துட்டேன். குழந்தை வாய்விட்டு அழுதுப்டா தேவலை. முனகறான். வயித்தை ஒட்டிக்கிறது." அப்படின்னா என்ன பாட்டி?

அம்மா எப்பவுமே என்னை எரிஞ்சு விழுவா. 'கண்ணன் கிட்டேயிருந்து ஒரு திங்கற பொருளை காப்பாத்தனும்னா வயித்திலேதான் வெச்சுக்கணும். வேற இடம் கிடையாது.' அப்ப நீ சொன்னே 'டேய் நீ அவ்வளவு கெட்டிக்காரனா. இதோ இந்த டப்பாவுல பேரிச்சங்கா, முந்திரிப் பருப்பு, காஞ்ச திராட்ஷை இருக்கு. நீ எப்படி எடுக்கறேன்னு பார்த்துடறேன்னு' தன் மடித் தலையணைக்கடியில் என் கண் எதிரேயே வைத்துக் கொண்டுவிட்டாய்.

சரி. வழக்கம்போல பாட்டிக்கு நான் பொடுகு எடுக்க ஆரம்பித்தேன். மத்தியானம் எனக்கு அது ஒரு வேலை. அம்பது பொடுகுக்கு ஒரு பைசான்னு கணக்கு. பாட்டியை தூங்க வைக்க அது ஒரு வழி.

பாட்டி லேசாய் குறட்டை விட்டா. knack ஆக கையை விட்டு டப்பா மூடியைமட்டும்—டப்பா அப்படியே இருந்த இடத்துலேயே-மூடியை மட்டும் கழட்டி கையை உள்ளே விட்டுட்டேன். அவ்வளவுதான். பாட்டியோட குறட்டை சத்தம் கேட்கலே. மூக்குலேருந்து புஸ்புஸ்ஸுன்னு மூச்சு பெரிசாய் வந்தது.

பாட்டிக்கு முழிப்பு வந்தப்ப டப்பா காலி. பாட்டி அசந்துபோனாள். சிரிச்சுண்டே என்னை அடிக்க துரத்திண்டு வந்தா 'லொங்கு லொங்கு கொழ கொழா பாட்டி, பசுமாடு பாட்டி.' நான் சிரிச்சுண்டே ஓடினேன். 'கண்ணா, கள்ள பிரான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/338&oldid=1497808" இலிருந்து மீள்விக்கப்பட்டது