பக்கம்:அவள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 லா. ச. ராமாமிருதம்

நினைத்துப் பார்க்கிறேன். பாட்டி! உன் மனம் எவ்வளவு பெரிய மைதானம். இல்லை. மைதானத்தின் மேல்வானம். வானத்தில் முழு நிலா.

பாட்டி இந்த சமயத்தைத் தொட்டு எனக்கு என்னென்னவோ தோணறது.

கிராமத்தில் வாய்க்கால் கரையில் கத்தாழைப்புதரில் வம்பாடும் மின்மினிகள்.

அம்பாளுக்குப் பட்டாடை உடுத்தினாற்போல் ஒரு முருங்கை மரத்தில் அடை அடையாய் அப்பின மின் மினிகள். .

சேரியில் சாமியை வரவழைக்கும். உடுக்குகள்.

முழங்கை தடிமனுக்கு சாரையோ நல்லதோ முழு நிலவில் பசும்புற்களிடையே சரசரசரேல்.

வானில், என்னவோ சொல்ல நட்சத்திரங்களின் தவிப்பு.

வயக்காட்டில் பம்ப் செட்டிலிருந்து பயிருக்கு பாயும் தண்ணீரின் சலசல.

நடுநிசியில் எங்கிருந்தோ ஏற்றப்பாட்டு.

திடீரென்று எனக்கே எதற்கென்று தெரியாமல் நெக்குருகி ஏக்கத்தில் ஒரு நெஞ்சத் தழுதழுப்பு.

இத்தனையும் யாரும் பார்க்காமல் நுகராமல் போகவோ வருகின்றன. போகின்றன? கதையாம், கவிதையாம். காதலாம். கன்னத்தில் பருவாம் என்று கரிப்பதைத் தவிர அவர்களுக்கு என்ன வேலை? அவா பெரியவா. வெட்கமாயில்லை!

பாட்டி, நீ துளசி. நீ ஒளஷதம். நீ கஷாயம். நீ மணம். உன் காற்றுக்கு பாம்புகூட நடமாடாதாமே! உன் பேரைக்கொண்டே உனக்கு ஒரு அர்ச்சனையே தொகுத்து விட்டேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/340&oldid=1497815" இலிருந்து மீள்விக்கப்பட்டது