304 லா. ச. ராமாமிருதம்
துளசியின் கணவன் வயணமில்லை. புதுக்குடித்தனத்தின் ஆறு மாதங்களுக்குள் நகைகள் காலி. அப்புறம் பண்டம், பாத்திரங்களின் படிப்படியான மறைவு. எங்கே போயின, எப்படிப் போயின? தெரியல்லியே மாமி! இத்தனைக்கும் கெட்ட பழக்கங்கள் இருப்பதாகத் தெரியல்லே; சிகரெட் தவிர. ஆனால் இப்போ யார் பிடிக்கல்லே?
மளிகை, பால், அரிசி, வாடகை என்று எங்கும் பாக்கி வைத்துவிட்டுக் காணாமல் போய்விடுவானாம். இதுபோல் இதுவரை நான்கு முறைகள் ஆகிவிட்டன. "சாபம் மாமி! சாபம்" மாமி தலையில் அடித்துக்கொண்டாள்.
அண்ணா பொறுமைசாலி. பொறுமை, கடலினும் பெரிது. ஆனால் கடைசி முறையில் கரை புரண்டுவிட்டது. "இனிமேல் அவனுக்குச் செருப்பு." துளசியை எச்சரித்து விட்டார். பிறகு தங்கைக்கு ஆசிரியை வேலை தேடித் தந்தார். இங்கே குடித்தனம் வந்தபோது, குடும்பத்தின் நிலை இது.
இப்போ என்ன?
மூன்று வாரங்களுக்கு முன் துளசியின் கணவன், கண்ணில் பட்டானாம். பள்ளியின் தெருமுனையில் காத்திருந்து துளசியை மடக்கிச் சந்தித்து வாழ அழைக்கிறானாம். மீண்டும் மீண்டும்.
ஒஹோ. அதான் துளசியின் புது மலர்ச்சியா?
எங்கோ பஹுதூர், துார் வானம் மெளனமாகக் குமுறுகிறது. இங்கே நெஞ்சு இடிகிறது. வான்விளிம்பில் மின்னல் படபடக்கிறது—தேவியின் விஷம கண்சிமிட்டல். ஆனால் அவளுடைய வேடிக்கை அவளுக்கே புரிகிறதோ?
அதோ வெகு எட்டத்தில் அலை திரள்கிறது. அதன் பெரிது இங்கே கரையிலிருந்தே தெரிகிறது. உருண்டு, திரண்டு, உயர்ந்து, விலகி, புடைத்து கரை நோக்கி வருகிறது. கரை நோக்கித்தானே வர வேண்டும்! அதன் விதி வேறு.