xxxv
பிறகு தண்ணிரை அவள்மேல் வீசிக் கொட்டுகையில், கசடுகள் களைகின்றன. சுத்தமாய், பத்திரமாய், பக்தியுடன் துடைத்துவிட்டு, குருக்கள் புதுப் புடவையைக் கொசுவம் வைத்துக் கட்டுகிறார். அம்பாள் அந்த சமயத்துக்கு அவளுடைய ப்ரபையிலிருந்தே புறப்படுவது போல் ப்ரமை தட்டுகிறது. ப்ரமைதான். ஆனால் இந்தப் பிரமைகளே அவள்மேல் உண்மையான பிரேமையுடன் கண்டு கொண்டேயிரு. ஒருநாள், உன் ப்ரமை, ப்ரமாணம் ஆகும்போது ஆச்சர்யப்படாதே. ஆச்சர்யப்பட்டுத் தருணத்துக்கு அபசாரம் இழைக்காதே.
பிறகு ஸஹஸ்ரநாம அர்ச்சனை. வெள்ளிக் கவசத்தில் அவள் ராஜாத்தியாக விளங்குகிறாள். எனக்குத் தோன்றுகிறது, இதுமாதிரி சமயங்களில் இதுமாதிரி நினைவுகளுக்கு மனம் தன்னை விட்டுக் கொடுக்க வேண்டும். அதற்குப் பழக்கிக்கொள்ள வேண்டும். மனம் எப்பவுமே தன்னை முழுக்க விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் மனத்தை அடித்து விரட்டி அடக்க முடியாது. மனம் ஒரு அராபிக் குதிரை, மனமே இரக்கம் பார்த்து ஒத்து உழைக்க அதைப் பாகுபடுத்தத் தெரிய வேண்டும்.
அவளை அலங்காரத்தில் காண்கையில் தோன்றுகிறது. இவள்மேல், இந்தக் குடும்பம், சந்ததி சந்ததியாக, அவரவர் தனித்தனி அவள்மேல் பொழிந்திருக்கும் அன்பில், பாவனைகளில், தன் வழியில் கலந்துகொண்டு எவ்வளவு அழகாயிருக்கிறாள்? இவள் எங்கள் பெருந்திருவாய் மட்டும் இப்போது இல்லை. யாராய் வேனுமானாலும் இருக்கட்டும். பாவனையின் உருவேற்றத்தில், எத்தனை அழகு, செருக்கு, சக்தி பெற்றிருக்கிறாள்! அவனவன் தனக்கென்று ஒரு கனாக் காண்கிறான். இந்தக் கனா வெறும் இஷ்டங்களுக்கும் ஆசைகளுக்கும் அப்பாற்பட்டது. ஏதோ ஒரு சமயத்தில் அத்தனை கனாக்களும் திரண்டு ஒன்றாகிவிட்ட ஒரே