305 லா. ச. ராமாமிருதம்
மாமியே இரண்டு பக்கமும் பேசிவிட்டாள். ஆனால் நியாயத்துக்கு இரண்டு முகம்தானா? நியாயமெனும் ஸ்படிக முப்பட்டகம்,
✽✽✽
ஸார் வீடு மாற்றிக்கொண்டு போய்விட்டார். எனக்குத் தெரிந்தவரை, அவர் அப்படி அவசரமாகப் போகும்படி, இங்கே அவருக்கு வசதிக் குறைவு இல்லை. ஆனால் அவரவர் செளகரியம், செளகரியமே நியாயம்.
என்னவோ நினைப்பு வந்தது. இங்கு இருந்தவரை துளசி அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்வாள். எனக்கு ஒரு குழப்பம். அவளே பறித்து, அவளே அரைத்து அவளே இட்டுக்கொள்ளும் நிலைமையில், ஆட்டுக்கல்லிலோ, அம்மியிலோ மருதாணியை ஒரு கையால் தள்ளித் தள்ளி அரைக்கும்போதோ, அந்தக் கையில் பற்றிக்கொள்ளாதோ?
இல்லை. அழகுக்காக இட்டுக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு கனவைத் தன்னோடு இருத்திக்கொள்ளும் வீம்பில் இட்டுக்கொண்டாளோ? மருதாணிக் கனவு. கனவின் வீம்பு.
கனவின் வீம்பு
✽✽✽
ஒரு நாள், வாசல் அறையில் நான் ஏதோ பைலைப் புரட்டிக்கொண்டிருக்கையில், ஜன்னல் வழி நிழல். தட்டிற்று. தலை நிமிர்ந்தால் வெளியே மாமி.
"இன்னிக்கு நீங்கள் கட்டாயம் வந்தே ஆகனும் துளசி உங்களை அவசியமாப் பார்க்கணுமாம். மறக்காதேங்கோ." நிற்கவில்லை. போய்விட்டாள்.
✽✽✽