அபூர்வ ராகம் 311
கண்டவிடத்தில் அகப்பட்டதைத் தின்று கையலம்பிவிட்டு, வாசல் திண்ணையிலோ, மரத்தடியிலோ படுத்துறங்கி விட்டு,
மேகங்களைக் குன்றுகள் தடுத்து குடங்குடமாய் மழை கொட்டும் மலைநாட்டின் கமுகுச் சோலைகளையும், மாடுகளைப்போல் மந்தை மந்தையாய் யானைகள் மேய்வதையும் பார்க்க வேண்டும். அசைவற்ற மனதின் அமைதி நிறைந்ததாய் பார்த்தவர்கள் சொல்லிக் கொள்ளும் கன்யாகுமரியின் கடற்கரையில், ஓங்கி நிற்கும் மணற்குன்றுகளில் ஒன்றின் மேல் உட்கர்ர்ந்து கொண்டு, சூர்யாஸ்தமனத்தைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.
நான் மொத்தத்தில் வேண்டுவது, ஒன்றும் வேண்டாம் என்பதே. இதனால் எனக்கு உலகத்தில் வெறுப்பு அல்லது ஞானப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று இல்லை. எனக்கு வாழ்க்கையில்தான் பற்று. அதை விட்டால் வேறு நம்பிக்கையில்லை. கண்கண்டதில் நம்பிக்கையில்லை. அதைத் தள்ளிவிட்டுக் காணாததைத் தேடி எப்படிப் போவேன்?
ஆனால் என் இஷ்டப்படி இவ்வுலகத்தை அனுபவிப்பதில்தான் எனக்கு ஆசை. இந்த மிருகத்தனம் என்னுடனே பிறந்துவிட்டதென்று நினைக்கிறேன்.
என்னுடலில் என் அப்பனின் மிருக ரத்தம் ஓடிற்று என்று நினைக்கிறேன். என் அப்பன் ஒரு உதவாக்கரை, ஓடுகாலி, சீட்டாட்டம், புகையிலை, கஞ்சாக்கூட உண்டாம். கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுத்த மாதிரி என் தாய் என் அப்பனுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டாள்.
என் அப்பன் தோற்றம் எப்படி என்றுகூட அறியேன். தான் வயிற்றில் ஆறுமாதமிருக்கையிலேயே வீட்டைவிட்டு ஒடிப்போனவன் இன்னமும் திரும்பி வரவில்லை.