312 லா. ச. ராமாமிருதம்
என் தாய் இன்னமும் குங்குமம் அணிந்துகொண்டு தானிருக்கிறாள். இருந்தும் என் அப்பனின் கதி, நாங்களிரு வரும் ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்ளாது உள்ளூர வேதனைப்பட்டுக்கொண்டு என்றும் தீராததோர் சந்தேகம்.
எப்பவுமே அப்படித்தானாம். திடீர் திடீரென்று வருவது, அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளுவது, உடனே ஒடவேண்டியது. அப்படியும் எனக்குமுன் நான்கு பிறந்து இறந்துவிட்டன. நான் மாத்திரம் தங்கிவிட்டேன்.
பணத்தென்போ, மனிதத் துணையோ இல்லாது என்னை வளர்த்து, படிக்கவைத்து, உலகத்தாரோடு ஒருவனாய்ச் சமமாக்கிய மகத்தான பெருமை என் தாயைச் சேரும். அவளில்லாது நானில்லை.
இருந்தும், தன் கடமையைச் செய்யத் தவறி, நான் என் கண்ணாலும் கண்டிராத என் தகப்பனைத்தான் என் மனம் நாடிற்று. அடிக்கடி அவனைப்பற்றிச் சிந்திப்பேன். நான் தலையைச் சாய்த்துக்கொண்டு யோசிக்கையில் அப்படியே என் அப்பன் மாதிரியிருக்கிறதென்று அம்மா சொல்வாள்.
என் தாயிடத்தில் எனக்கு மரியாதை, நன்றி
ஆனால் என் அப்பனிடந்தான் ஆசை.
காரணம்? காரணமேயில்லாத சில வேடிக்கைகள் உலகத்தில் இருக்கின்றன. உலகத்தில் தன்னைப் படாதபாடு எல்லாம் படுத்தி வைத்த கடவுளிடத்தில் அம்மாவுக்கு அபார பக்தி, பூஜை புனஸ்காரம், பட்டினி, பலகாரம், ஆசாரம், அனுஷ்டானம் எல்லாம் அமர்க்களம். நாள் கிழமை வந்தால் வயிற்றில் சோறு விழுவதற்குள் விழிகள் மலையேறிவிடும். அம்மா பட்டதில் கால்பங்கு கூட பட்டிராத எனக்கு மாத்திரம் ஏன் பக்தியில்லை.