பக்கம்:அவள்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 லா. ச. ராமாமிருதம்

எல்லோரும்போல் ஆகிவிட்டேன். பாழடைந்த கோவிலில் மூலவர்மேல் எலியும் பெருச்சாளியும் ஒடுவதுபோல் என்மேல் பேரன் பேத்திமார் ஏறி விழுந்து விளையாடுகின்றனர். கடன், வியாதி, கவலை, குடும்பம் எல்லாம் பெருத்துவிட்டன. இத்தனைக்கும் இடையில் நான் அவளைப் பற்றி நினைப்பதுமில்லை. ஆயினும் ஏதாவது ஒரு சமயம், இப்பொழுது நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டு, நெஞ்சு படபடக்கையில், அது பழைய ரத்த வேகத்தின் சாயையோ அல்லது வயதான கோளாறுதானோ என்று. சந்தேகமாயிருக்கிறது.

அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை பிடிபடாத பாம்புபோல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வரஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையே கற்றதுபோல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம்போல் பயந்த ஒரு முரட்டுத்தனம், சிலிர்சிலிப்பு.

அவள் அம்மாவை மயக்கிவிட்டாள். அம்மாவுக்கு வேண்டிய பணிவிடை, பக்தி, ஆசாரம் எதிலும் குறைய வில்லை. வந்த புதிதில் ஏதோ ஒரு விசேஷ தினத்தன்று படங்களுக்குப் பூச்சூட்டி விளக்கு ஏற்றி, எதிரில் நிவேதனங்களை வைத்துக்கொண்டு அம்மா, ஒவ்வொரு நாமமாய், அக்ஷர சுத்தமாய் சாவதானமாய்ச் சொல்லி அர்ச்சித்துக் கொண்டிருக்கையில், என் வயிற்றில் பசி எலிபோல் பிராண்டுகையில், அவள் கண்களை மூடி கற்பூரக் கொழுந்தென அசைவற்று நிற்கும் பரவசம் கண்டு பகீரென்றது. அம்மா ஏதோ காரியமாய்ப் பின் கட்டுக்குச் சென்றதும் சமையலறையில் நுழைந்தேன்.

'நான் ஒரு பாவி'—என்று ஆரம்பித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/360&oldid=1497933" இலிருந்து மீள்விக்கப்பட்டது