348லா. ச. ராமாமிருதம்
"ஹாஹா! தரிசித்தேன்! என் வாயில் ஆனந்த பாஷ்யம் ஊறுகிறதே! சுருக்க அவரை இலையில் வட்டியுங்கள், வட்டித்துவிடுங்கள்! அவருடன் நான் கலக்க முடியாவிட்டாலும், அவர் என்னுடன் கலந்துவிடட்டும்.'
"பக்தரே, பதறாதீர்! புண்ணியவதிகளுக்கும் பசிக்கும் என்பதை மறந்துடாதீர்' என்று அவள் என்னைக் கையமர்த்திவிட்டு, இரண்டு விரலால் ஒரு கவளம் வழித்து வாயில் போட்டுக்கொண்டு விரலைத் தொண்டை வரைக்கும் கொடுத்து சப்பிய பொழுதுதான் எனக்கு நிம்மதி ஆயிற்று. இதுவும் ஒரு மிருகம்தான்.
மிருகம்! மிருகம்!! எத்தனை தடவை சொன்னாலும் அலுக்கமாட்டேன்கிறது. உயர்ந்த ஜாதிக் காட்டுமிருகம். நின்றவிடத்தில் நிற்கமாட்டாள். உடலையும் உள்ளத்தையும் மிஞ்சிய வேகம் அவளை அலைத்தது.
நாவற் பழம்போன்று பளபளக்கும் கண்களும், இயற்கையாகவே காரியங்களிலும், உடலிலும் விறு விறுப்பும் சிற்சில சமயங்களில் உலகத்தின் மெதுவைத் தாங்கப் பொறுமையற்று முகம் சுளிக்கையில் அதில் குறுகுறுக்கும் களையும்.
தொம்பங்கூத்தாடி சாட்டைபோல் தடித்து, முழங்காலுக்கும் கீழ் தொங்கும் பின்னலும்.
அபூர்வ ராகத்தின் ஜீவஸ்வரமாய் அவள் கூந்தல் விளங்கிற்று பின்னாது வெறுமென முடிந்தால் ஒரு பெரும் இளநீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண் டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராக்ஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும். நாங்கள் எப்படியும் தெருவில் போனால், திரும்பிப் பாராதவர் இல்லை. அதுவே லஜ்ஜையை உண்டு பண்ணும். அம்மாவுக்கு அம்மயிரைப் பின்னப் பின்ன