பக்கம்:அவள்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324லா. ச. ராமாமிருதம்



வாலிபம். வயது இருபது இருபத்தி ஐந்துதானிருக்கும். ரொம்ப கிடக்கவில்லை. முகம் சுண்டவில்லை. தூங்குகிறாற்போல் இருந்தது. எந்த நிமிஷம் எங்கே யென்று சாவு காத்திருக்கையிலேயே, வாழ்க்கையில் செளகரியமாயிருக்க முடிந்தும், ஒருவரையொருவர் பரீக்ஷை பார்த்துக்கொண்டு, விரல் வழி வழியவிட்ட தேன்போல், வாழ்நாளை நழுவ விடுகிறோம்.

என்னால் பிரிந்திருக்க முடியாது. அவளை எப்படியாவது திருப்பி வரவழைத்துக் கொள்ள வேண்டும், என் தோல்வியை ஒப்புக்கொள்ளாது. சட்டென ஒரு யோசனை தோன்றிற்று. அசட்டு யுக்தியோ சமத்து யுக்தியோ, அப்பொழுது என்ன தெரிகிறது? நேரே தபாலாபீஸுக்குச் சென்று ஒரு தந்தியடித்தேன்.

"கடுஞ்சுரம் அபாயம்: புறப்பட்டு வரவும்."

நாளைக் காலை போய்ச் சேரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வருவாள், பார்த்துப் பரிகசிக்கலாம். அப்படியே ரொம்பவும் கோபித்துக் கொண்டாலும் ஏதேனும் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். எப்படியோ வந்துவிடுவாள்.

இரவு இத்தனை நாளாக இல்லாத நிம்மதியுடன் துரங்கினேன்.

நடு இரவில் கதவை யாரோ உடைத்தார்கள்.

'தந்தி ஸார்!’

தந்தி! வயிறு பகீர். தந்தி அனுப்புவதைப் போலல்ல, வந்த தந்தியை வாங்கியுடைத்துப் படிப்பது. 'பாம்பு கடித்துவிட்டது. புறப்படவும்."

"அம்மா!'

அம்மா சுவாமி பிறையண்டை போய் கன்னத்தில் போட்டுக்கொள்கிறாள். இன்னும் அரைமணி நேரத்தில் வண்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/368&oldid=1497924" இலிருந்து மீள்விக்கப்பட்டது