பக்கம்:அவள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxxvii

சமாதானமோ, இன்று நாற்பத்திஏழு வருடங்கள் எங்கள் மணவாழ்க்கை ஒடிவிட்டது. அவள் உதட்டோரங்களில், வெற்றி துளிக்கிறது. முகத்தில் ஒரு குழந்தைத்தனம்.

"இன்னும் மூணுவருடங்களில் நமக்குக் கல்யாணமாகி ஐம்பது வருஷம், உங்களுக்கு சதாபிஷேகம்' என்கிறாள். அவள் நோக்கில் அது ஒரு சாதனை. கூடவே அந்த விசேஷத்தின் லோகாதாயமான லாபங்களின்மேலும் கண் இருக்கலாம். இருக்கட்டுமே எப்படியும் அவள் பெண் தானே!

ஆனால், இச்சமயம் நான் பார்ப்பது, இவள் தன் தாய்க்கு மகள், உடன்பிறப்பாளுக்குச் சகோதரி, என் மனைவி, பிறகு தன் குழந்தைகளுக்குத் தாய், அடுத்துப் பேத்தியின் பாட்டி, அவள் குணத்தின் நல்ல சமயங்களில் எனக்கு ஆலோசகி, இப்போது எனக்குச் சினேகிதி எனப் பெண்மையின் ஆசிரமங்கள் அத்தனையும் வகித்து விட்டாள், வகிக்கிறாள். ஒருவேளை நான் தேடும் அவளே தான் இவளோ? இவளே தான் அவளோ? ஆகவே தன் முறையில் வணக்கத்துக்குரியவள்.

நெஞ்சில் குங்கிலியம் மணக்கிறது.

கர்ப்பக்கிருஹத்திலிருந்து அவளுடைய சலுகைப் புன்னகையின் ஒளி என்மேல் படர்வதை உணர்கிறேன்.

***

'வாங்கோ அப்பா, எழுந்திருங்கோ. நமஸ்காரம் பண்றோம். வண்டிக்கு நேரமாச்சு' கண்ணன் வீபூதி மடலை நீட்டுகிறான்.

மெளனமாய் எழுந்திருக்கிறேன். கனாப்போல வாரம் ஒடிப்போச்சு. விழிப்பை எதிர்பார்த்து வயிற்றைச் சுருட்டிச் சுருட்டிப் பயந்துகொண்டிருந்த நாள். திகில் வேளையே வந்தாச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/37&oldid=1496135" இலிருந்து மீள்விக்கப்பட்டது