பக்கம்:அவள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328லா. ச. ராமாமிருதம்



புயலில் குடையைக் கொண்டு போகச் சாத்தியமில்லை. தூறல் முகத்தில் சாட்டை அடித்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் குடைக்கம்பி கனத்தில் பளபளத்துக்கொண்டு பூமிக்கும் வானத்திற்கும், ஜல்லி கட்டியது போன்றிருந்தது. தெருவில் ஜலம் பிரவாகமாய் ஓடியது. சாபம் பிடித்ததுபோல் தெரு வெறிச்சென்றிருந்தது. இந்த மழையில் எங்களைத் தவிர எவன் கிளம்புவான் ? எதிர்க்காற்றில் முன் தள்ளிக்கொண்டு ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறு ஜலத்தில் இழுத்து இழுத்து நடந்து சென்றோம்.

இடையிடையே இடியில் பூமி அதிர்ந்தது.

கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக் கோட்டைபோல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக்கொள்ள வேண்டுவதுபோல் துரத்திக்கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல், அவைகளின் கோஷம் காதைச் செவிடுபடுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறிகொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுறீலெனப் பொரிந்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போலிருந்தன.

திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண் முன் நிற்கிறது அம்மின்னல், மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காக்ஷி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி, குளவியாகக் கொட்டும் மணலும், கோபக் கண் போல், சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளின் சுழிப்பும், அடி பட்ட நாய் போல் காற்றின் ஊளையும் பிணத்தண்டை பெண்கள் போல ஆடி, ஆடி அலைந்து, அலைந்து, மரங்கள் அழும் கோரமும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/372&oldid=1497915" இலிருந்து மீள்விக்கப்பட்டது