230லா. ச. ராமாமிருதம்
டாக்டர் வந்து என்னவோ புரட்டிப் புரட்டி பரீக்ஷை செய்து பார்த்தார். ஸ்மரணையற்று, போட்டது போட்டபடி கிடந்தது அந்த உடம்பு. நின்ற இடத்தில் நிற்காது துருதுருக்கும் உடம்பு!
'இது நீங்கள் ஒண்டியாய் சமாளிக்க முடியாது' என்றார். மூஞ்சியை முழநீளம் வைத்துக்கொண்டு, "ஆஸ்பத்திரி.'
"ஆஸ்-பத்-தி-ரி?"\
நேற்றிரவு வெறி பிடித்து விளையாடினோம். இன்று ஆஸ்பத்திரி
'விஷயம் முற்றிவிட்டது ஸார். வீட்டில் பெரியவாள் யாராவது இருந்தால் வரவழையுங்கள்."
அம்மாவுக்குத் தந்தியா? நான் என்னுள் ஒடுங்கிப் போனேன்.
'ஆஸ்பத்திரியில்கூட கூட்டத்தில் கோவிந்தா ஆகி விடும். வீட்டில் பெரியவாள் யாராவது இருக்கட்டும். நான் வந்து பார்க்கிறேன், என்னவோ?’’
உள்பிரக்ஞையிருக்கையிலேயே மண்டையில் சம்மட்டியிலடிப்பது போலிருந்தது. அம்மாவுக்குத் தந்தியடிக்க விலாசத்தையும் பணத்தையும் அவரிடமே கொடுத்து விட்டுக் கட்டிலண்டை வந்து உட்கார்ந்தவன்தான், எத்தனை நாழி இப்படி இடம் பெயராது திக்பிரமை கொண்டு உட்கார்ந்திருந்தேனோ அறியேன்.
என்னில் என்னென்ன எண்ணங்கள் ஒடின அறியேன். வெளியே அடைமழை பெய்து கொண்டிருந்தது நினைவிருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதோ யில்லையோ, ஒரு நாளும் தவறாது எரியும் சுவாமி விளக்கு இரண்டு நாளாய் எரியவில்லை. அது நினைவிருக்கிறது.