அபூர்வ ராகம் 331
கண்ணெதிரில் கடுஞ்சுரம் அவள் பசுமையை உறிஞ்சுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது நினைவிருக்கிறது.
வைத்தியர் தினம் மூன்று தடவை வந்தார். ஒவ்வொரு தடவையும் அவர் முகம் சுண்டியது. அது ஞாபகமிருக்கிறது.
என் தோளைப் பிடித்துக் குலுக்கினார். "தைரியமாயிருமய்யா. உமக்கு முதலில் ஒரு ஊசி போட வேண்டும் போலிருக்கிறது. இந்த மும்முரத்தில் ஒரு மருந்தும் ஒன்றும் செய்வதற்கில்லை. இன்று ராத்திரி தாண்டனும். நீர் கூடியவரைக்கும் தெம்பாயிரும். நீங்கள் இப்படியிருந்தால் அப்புறம் படித்தவனுக்கும் படியாதவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?’
நாங்கள் படித்தவருமில்லை; படியாதவருமில்லை. நாங்கள் மிருகங்கள்.
"இளம் வயது- அதுதான் தாக்குப் பிடிக்கவேனும்-- உங்க அம்மா வந்துவிட்டாரா?'
அம்மா, மாலை அஸ்தமன வேளைக்கு வந்தாள், என்னுடன் பேசவில்லை. கட்டிலில் படுத்திருந்தவள் முகத்தை ஒரேமுறை பார்த்தாள். நாடியைத் தொட்டாள். நேரே குழாயடிக்குப் போய் ஸ்னானம் பண்ணினாள். நெற்றிக்கிட்டுக் கொண்டு சுவாமி விளக்கையேற்றி வைத்து எதிரே உட்கார்ந்துவிட்டாள்.
பிறகுதான் எனக்கு உள் பிரக்ஞை வெளியிலும் சிறுகச் சிறுகப் பாவி நினைவு தொடர ஆரம்பித்தது.
இரண்டே நாள் ஜூரம் அந்த உடலை சக்கையாய் சப்பியெறிந்துவிட்டது. உருவம் கூடச் சிறுத்துவிட்டது. மூச்சு நூலிழைந்தது.