அபூர்வ ராகம் 335
நாளை ஞாயிற்றுக் கிழமை--
இன்னும் இரண்டரை நாட்கள்தான் முழங்கால் வரை தொங்கும் மயிர்-அபூர்வ ராகத்தின் ஜீவஸ்ரம்-பிறகு?
இதென்ன கூந்தலுக்கா இவ்வளவு பிரமாதம், இன்னும் ஆறு மாதமோ ஒரு வருஷமோ போனால் தானே வளருகிறது. தவிர சுவாமிதானே சாகக் கிடந்தவளைக் காப்பாற்றிக் கொடுத்தார். அவருக்குச் சேர வேண்டியதைச் செலுத்தித்தானே ஆக வேண்டும்! எல்லோரும் வேண்டிக்கொள்ளவில்லையா, இதென்ன புதிதா?
எல்லாம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் மிருகங்கள். அடுத்த நிமிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்தையும் அந்தந்த நிமிஷத்திற்குப் பூராவாக அநுபவிப்பது தான் எங்களுடைய அடிப்படையான இயல்பு. வளைந்து கொடுக்கும் பழக்கம் எங்களுக்கில்லை. நாங்கள் அடங்க வேண்டுமெனில் எங்களை ஒடித்துத்தானாக வேண்டும்.
இந்த இரண்டு நாளும் நாங்களிருவரும் இதைப் பற்றிப்பேசவில்லை. அவள் தன் மனதிலிருப்பதை விட்டுக் கொடுக்கவில்லை. சற்றே காற்றடித்தாலும் சப்திக்கும் முறுக்கேறிய தந்தி போல் அவள் ஒரு புதுக் கலகலப்பாய் இருந்தாள். அவள் சிரிப்பில், கண்ணாடி உடையும் சத்தம் போல் ஒரு சிறு அலறல் ஒலித்தது. இதைத் தவிர மற்றதெல்லாம் பேசினோம், சிரித்தோம், கொம்மாள மடித்தோம். ஆயினும் இது தவிர வேறேதுவும் எங்கள் நினைவில் இல்லை.
எனக்குப் பேச வாயில்லையோ, அல்லது சொல்ல வகையில்லையோ, நான் தனியனாகிவிட்டேன். அவள் இப்படி வேண்டியில்லாத ஒரு வனப்பில் ஜ்வலிப்பதைத் தடுக்கவோ, தணிக்கவோ, வழியில்லாது வெறுமென பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தேன்.