xxxviii
மூவரும் நமஸ்கரிக்கின்றனர். குழந்தை ஏன் நமஸ்கரிக்கணும்? கண்ணன் ஏற்பாடு, இப்படியெல்லாம் 'ட்ராமா' பண்ண அவனுக்குப் பிடிக்கும்.
நமஸ்காரத்திலிருந்து குழந்தை எழுந்து நின்று கைகளைத் தூக்குகிறாள். தூக்கனுமாம்! தூக்கிக்கொள்கிறேன். என் கன்னங்களை இரண்டு கைகளிலும் பிரட்டி இழுத்துப் பிடித்து முத்தமிடுகிறாள்.
'செல்லக் குட்டித் தாத்தா!'
'ஒ' போடும் குஷியிலிருக்கிறாள்.
குரல் சட்'டென மாறுகிறது.
'என்ன தாத்தா அழுவறே?' உதட்டைப் பிதுக்குகிறாள்.
நான் வாய் திறக்கவில்லை. திறந்தால் உடைந்து விடுவேனோ? என்று பயம். அவள் அம்மை மெதுவாக என் பிடியிலிருந்து குழந்தையை விடுவித்து வாங்கிக் கொள்கிறாள்.
'வா பாப்பூ, பஸ்ஸுலே ‘ஓ’ போவோமே!'
'நேக்கு செல்லக்குட்டித்தாத்தா வேணும்' குழந்தை திமிருகிறாள். யார் அவளை விடுகிறார்கள்? விடமுடியும்? வாசலில் 'பைக்' ஸ்டார்ட் ஆகிவிட்டது.
'செல்லக் குட்டித்தாத்தா வேணும்! தாத்தா! தாத்தா!'
அந்தக் குரல் தூரத்தில் ஒயும்வரை, அந்தத் திக்கைப் பார்த்துக்கொண்டு வாயடைத்து நிற்கிறேன்.
அடுத்தமுறை அவள் வரும் வரை, எத்தனையோ கவலைகள், கவனங்களின் புதைவிலிருந்து நெஞ்சில் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.