336லா. ச. ராமாமிருதம்
மறுநாள் காலை வண்டி.
இரவில் அறையில் நுழைந்தேன். அவள் கண்ணாடி எதிரில் உட்கார்ந்துகொண்டு, மயிரை அழுந்தப் பளபளவெனச் சீவி வாரி முடிந்து கொண்டிருந்தாள். என் மனதில் என்னென்னவோ எழும்பிக் குழப்பிற்று. என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
'உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென ரொம்ப நாளாய் எண்ணம்' என்றாள்.
"என்ன?"
"நான் கிடந்தபோது ஏதாவது ஜன்னியில் பிதற்றினேனா? அபஸ்வரம் பேசினேனா?”
"அபூர்வ ராகத்திற்கு அபஸ்வரம் கிடையாது” என்றேன். 'சரி நான் அப்பொழுது இறந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமோ?'
"இதென்ன கேள்வி!"
'பதில் சொல்ல முடியுமா, சொல்லத் தைரியமில்லையா?'
'எப்படி நன்றாக இருந்திருக்கும்? அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல் கட்டத்தில் ராகம் தவறில் அதைவிட அவமானம் உண்டோ?'
"ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமா?" எதற்காக என்ன கேட்கிறாள் என்று புரிந்தும் புரியாது தவித்தேன். ராகம் தன் இயல்பு மாறாதவரை எப்படியிருந்தாலும் சுஸ்வரந்தான். இந்த மூடுமந்திரம் ஏன், பளிச்சென்று சொல்லேன்."
கையில் சீப்பை வைத்துக்கொண்டு ஏற இறங்க என்னை ஒருமுறை மலர விழித்துப் பார்த்தாள். அங்கு ஆயிரம் கேள்விகள் குமுறின.