அபூர்வ ராகம் 337
'இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்து விட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? ராகத்திற்கும் பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே!"
'இப்போ என்னவென்கிறாய்?"
'ஒன்றுமில்லை. ராகத்தின் முடிவும் எடுப்பாய்த் தானிருத்தல் வேண்டும்.’’ கொண்டையைப் போட்டுக் கொண்டு எழுந்தாள்.
"எங்கே’’
'கீழே போகணும். இதோ வருகிறேன்..."
படுக்கையில் உட்கார்ந்தபடி யோசனையில் ஆழ்ந்தேன். வெளிப்படையாகச் சொல்லி ஆற்றிக் கொள்வதில் ஆறுதலுண்டு. இப்படி வெளிக்காண்பிக்காமலே உள்படும் வேதனைதான் சகிக்க முடியவில்லை.
நிம்மதியற்ற உறக்கத்தில் கண்கள் செருகின.
நாளைக் காலை எழுந்ததும் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன். திருப்பதிக்குப் போவது முடியாது. அம்மா சும்மாயிருக்க மாட்டாள். வீட்டில் ரகளை நடக்கத்தான் போகிறது. நடக்கட்டும். கண்டிப்பாய் நடந்தே தீரும். இருந்தும் வேறு வழியில்லை. இதனால் தெய்வ கோபத்திற்கு ஆளானாலும் சரி. இதற்காக அம்மாவிடமிருந்து கண் மறைவாய் இருக்கும்படி நேர்ந்தாலும் சரி, தெய்வத்தினிடமிருந்து ஓடும்படியிருந்தாலும் சரி. எங்கேயாயினும் இருவரும் போய்விடுவோம். இதற்காக எங்கள் சுபாவம் மீறி எப்படியிருக்க முடியும்?
அவளிடம் சொல்ல, அவளையெழுப்புவதற்காக அவள் பக்கம் கையை நீட்டினேன். அவள் இடம் வெறிச்சென்றிருந்தது. விழித்துக்கொண்டேன்.
அ - 22