தரிசனம் 341
முன்னால் வாயை அலம்பு. கை, கால் சுத்தி பண்ணிண்டு விபூதியிடு. உதிரி வித்தை வேண்டாம். குழைச்சு பட்டை பட்டையா. சுவாமி படத்துக்குத் தோப்புக்கரணம் போடு-இரு. விளக்கை ஏத்தறேன். அம்பாளை மன்னிப்புக் கேள். ஜகன்மாதா! பத்து நாளைக்குப் பயலுக்கு ராச்சோறில் மண்ணை வெட்டிக்கொட்டு. குடும்பத்தின் பேரைக் கெடுக்க எங்கிருந்துடா முளைச்சே?. உனக்காக நானும் பிராயச்சித்தம் 108 காயத்ரி பண்றேன்-வேளை போறாத நேரத்தில் பாவி வேலை வைக்கிறான். அடியே வண்டைக்காய் வாங்கிண்டு ந்திருக்கேன். மறக்காமல் குழம்பில் வதக்கிப் போடு! போடறையா? போடறேன்னு சொல்லேன்! வாயில் கொழுக்கட்டையா அடைச்சிருக்கு?"
நல்ல வேளை!
இப்படியெல்லாம் கேட்பீர்கள்...மண்ணில் கழுத்து வரை புதைத்துத் தலையை இடறுவீர்கள் என்று தெரிந்து தான் என் காதலை உங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆமாம், கேட்கிறேன். காதலெனும் பேருக்கே இந்த பூச்சாண்டியா? அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் நீங்கள் இரவு உங்களைக் காலைப் பிடிக்கையில் சொன்ன கதைதானே! "நாளைக்கு நாளைக்கு' என்று நந்தனுக்குக் கண்டது என்ன? மூன்றே நாளில் கண்ணப்பன் முத்தி கண்டது என்ன? அவர்களுக்கு நேர்ந்தது எனக்கு நேரக்கூடாதா?
"அவாள் எல்லோரும் அவதார புருஷாள். லோகத்துக்கு காண்பிக்க வந்தவாள் (என்னத்தை?) அறுவத்தி மூணு நாயன்மார்கள். நீ கேவலம்-சீ எதிர்த்தா பேசுறே? மூடு வாயை எழுந்திருந்தேன்னா விசிறிக்கட்டை பிஞ்சுடும்.'
அதனால்தான் உங்களைக் கேட்கவில்லை