தரிசனம் 343
இதற்காகத்தான். இதைத்தான் 'நெருப்பில் கை வைக்காதே’ என்று பெரியவர்கள் கோபமெனும் பேரில் செய்த எச்சரிக்கையா?
ஆனால் என்னிஷ்டத்தில் என்ன இருக்கிறது?
மொட்டை மாடிமேல் கவிந்த வானத்தில் நக்ஷத்திரங்கள் என்னிடம் ஏதோ சொல்லத் தவித்து மூச்சு விடுகின்றன. இங்கு மட்டுமல்ல. இதே சமயத்தில் கன்யா குமரியையும் கவிந்துகொண்டிருக்கிறோம் என்றா?
அங்கு மாரிக்காலத்தில் மழை மேகங்கள் கடல்மேல், ஜலரலம் ஒட, லொங்கு லொங்கென்று குடம் குடமாய், பழம் பழமாய் நாங்கள் தொங்குவதை நீ பார்க்க வேண்டாமா? அவள் அபிஷேக சுந்தரி. கடல் நீரில் குளிக்கும் கன்யாகுமரி.
சப்தரிஷி மண்டலம் நெஞ்சில் ஏர் பிடித்து உழுகிறது; புவனமே ஒரு ரஸகுண்டு. நம் அவ்வப்போதைய எண்ணங்களின், ஏக்கங்களின் வர்ணங்களை, சாயங்களை உள்ளுக்கு வாங்கிக்கொண்டு ஆசை காட்டிக்கொண்டு மினுமினுக்கிறது.
இரவு நேரத்தில் என்ன வெளிச்சம் எரிகிறது? சொக்கப் பானையா? இவ்வளவு பெரிய திருஷ்டி கழிப்பா? பிணமா? இத்தனை விதங்களில் நானா?
ஏன்?
ஏன்? ஏன்?? ஏன்???
எதிர் வீட்டிலிருந்து வீணையில் மோகனம் கிளம்பி நெஞ்சில் கொக்கி மாட்டியிருக்கிறது.
மோகனமா? கல்யாணியா? மோகன கல்யாணியா?
குங்கிலியச்சுடர் போன்று 'குபுக் குபு'க்-ஸ்வரப்பந்துகள் குபீரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன.