பக்கம்:அவள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344லா. ச. ராமாமிருதம்



இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமுமில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம்; அவரவர் உடன் கொண்டுவரும் அவரவரின் சொந்த ராகம். பிறவிக் காட்டில் மாட்டிக்கொண்டு திக்குத் தெரியாமல் எதிர்க் குரல் தேடி அலையும் அபயக் குரல்.

எதிர்வீட்டில் ஒரு பெண். வயது முப்பத்திரண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். இங்கு தாங்கள் குடி வந்ததிலிருந்து நான் இன்னும் அவளை முகம் பார்த்த தில்லை. ஜன்னல் பக்கம் நிழல், மாடியில் துணி உலர்த்தவோ, கூந்தலை ஆற்றவோ, மாலை வேளையில் காற்று வாங்கவோ-ஊஹூம்.

அவளை அவள் பயிலும் வீணையின் இசையாய்த் தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹுதியாய்ச் சொரிகின்றாள். அவள் தாபத்தின் தஹிப்புக்கு வீணை வெறும் வடிகாலாய் இல்லை. இன்று இவள் வாசிப்பைக் கேட்கையில் வீணை இவள் தலைவிதி. என் வேளை வரும்போது என் சிதையில் என் வீணையை என் தலைவிதியை என்னோடு எரித்துவிடுங்கள், என் வேளையே! எப்போது வருவாய்?' என்கிற மாதிரி.

தன் கை பிடிக்க உகந்த புருஷனுக்குக் காத்திருந்து காத்திருந்து அவன் வராமல் கடைசியில் கல்யாணம் என்று ஆனால் போதும் என்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. கன்யா--

-இனி குமரி இல்லை.

நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?

ஏன்? 'ஏன்'களுக்கு முடிவே கிடையாதா?

என்றுமில்லாத் திருநாளாய் இன்றிரவு வெற்றிலை போட்டுக்கொள்ள ஆசை எழுந்தது. செல்லத்தைத் திறந்து ஒரு வெற்றிலையை எடுத்துத் தொடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/388&oldid=1497795" இலிருந்து மீள்விக்கப்பட்டது