2
இத்தத் தொகுப்பின் அவள்’ எனும் தலைப்புக்கு உந்துதலாயிருந்தவை எங்கள் குலதெய்வம் பெருந்திருப் பிராட்டியும், இதன் முதன் மூன்று கதைகளா, கட்டுரைகளா என இனம் நிர்ணயிக்க முடியாதபடி அவை அமைந்துவிட்டன. மொத்தமாய்ச் சொன்னால்-உரத்த சிந்தனைகளும்தான்.
இந்த முதன் மூன்று ஆக்கங்களுக்குக் கிடைத்த ஆதரவு கண்டு "இதே தலைப்பில் இன்னமும் எழுதினால் என்ன?" என்று அப்படியே நாலைந்து கதைகள் எழுதியதும் "அவள்” என்கிற ஒரே தலைப்பு குழப்பமாயிருக் கிறது. கதைக்குக் கதை வேறு காண வாசகர்கள் சிரமப்படுவார்கள். (வாசகர்கள் சிரமப்படுகிறார்களோ இல்லையோ)-வெளியிடுபவர்கள் ஆட்சேபித்தார்கள்.
நாற்பது வருடங்களுக்கு முன் இதழ்கள் எனும் வரிசையில் கதைகள் எழுதினேன். ஒரே தலைப்புக்கு அப்போது சர்ச்சை எழவில்லை. ஆனால் அவை கதைத் தொகுதியாக வெளிவந்தபோது, அடையாளம் கண்டுபிடிக்க சிரமம் எனக்கே தெரிந்தது. தனித்தனித் தலைப்புகளின் உசிதம் உணர்ந்தேன். தலைப்புகளும் பொருத்தமாகவே அமைந்தன. 'மடிப்பு' விசிறியை ஒரே வீச்சில் பிரித்தாற்போல "அவள்” எனும் ஸ்வரூபத்தின் விசிறல் தான் இந்தத் தொகுப்பின் முழு உள் அடக்கமும்.
"அவள்’-தலைப்பின் நோக்கமும் பொருளும், பெண்ணின், பெண்மையின் தன்மைகளை, எனக்கென்று வாய்த்த எழுத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதுதான்.