பக்கம்:அவள்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தரிசனம் 347

நேர் ஆவதற்கு இருக்கும் இந்த சொற்ப நேரத்துக்கு வந்திருக்கும் கனத்தின் அழுத்தம், உள் பரபரப்புத்தான் தாங்க முடியவில்லை. ஒரு கையால் மார்பை அழுத்திக் கொள்கிறேன்.

திரும்பிவிடலாமா?

யாரோ எங்கோ சிரிக்கும் சப்தம்.

சன்னதியில் மின்விளக்கு கிடையாது, கர்ப்பக்ருஹத்தின் வாசல் ப்ரபை பூரா அடுக்கடுக்காய் அகல்ஜோதிகள் எரிகின்றன. அசப்பில், ஹோமகுண்டத்தின் நடுவே அவள் நிற்கிறாள்.

அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.

இருளில் நெருங்கிய வெண்கல விளக்குகளின் சுடர் தரும் ஒளி, நிழலாட்டத்தின் செதுக்கலில் அவள் வெளிப் படுகிறாள்.

கற்பனையில் ஆவாஹனம் ஆகி, கவிதை (வெறும் சொற்கட்டுகள் அல்ல, இதயத்தின் அடிவார எழுச்சிகள்) ஊட்டி, அலங்கரித்து, உள் பார்வை காத்த உருவை, கேவலம் ஐம்புலன்களும் சேர்ந்த வெளிப்படையில் காண நேர் கையில் இத்தனை நாளையக் கனவு அந்தக் கணமே சிதைந்துபோகும் துக்கத்தைக் காட்டிலும் கொடுமை வேறு இல்லை-வேண்டாம்.

ஆனால் இங்கோ வேறு. புழு வெடித்துத் தட்டாரப் பூச்சி கிளம்புவது போல், கருப்பையில் பொத்திப் போற்றிச் சுமந்து வைத்திருந்த சிசு வெளியாகி, முதன் முதலாய்த் தாயின் கண்ணுக்குப் படுவது போல், நனவின் பொலிவு கனவையும் மீறிக் காட்டுகையில்-இந்த அனுபவத்தை விவரிப்பது எங்ஙணம்?

கண்டேன், உடைந்தேன். எனக்குக் கண்ட பயமே இதுதானோ? உன் விருப்பமும் இதுதானோ? உன் விருப்பத்தைத்தான் என் பயமாய்க் கண்டேனோ? ஏதேனும் தைரியம் சொல்லேண்டி--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/391&oldid=1497782" இலிருந்து மீள்விக்கப்பட்டது