பக்கம்:அவள்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தரிசனம் 349

பதினாறு வயது பச்சிளம் பாலா (இப்போதுதான் அரும்பு கட்டிய ஸ்தனங்கள்) திடீரெனப் பழுத்த தபஸ்வினி. அவள் தவத்தில் அவள் காய்ந்து கணகணக்கிறாள். முகத்தில் தவத்தின் கடுப்பு.

சீ-கிட்ட வராதே-என்னை யாரென்று நினைத்தாய்? நான் சிவசொத்து.

வியப்பில் ஆழ்கிறேன்.

உமையைப் பிரிந்த சிவம் அங்கு இமயமலைச் சிகரத்தில் தவமிருக்கிறான்.

இங்கு தென் கோடியில் அவரை அடைய இவள் தவம் கிடக்கிறாள்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யார் முன்னால் தணிவது என்று இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காத்திருப்பது என்றால் என்ன?

இங்கு இத்தனை அழகும், அங்கு அத்தனை செளகரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றா ஏங்கி, வரட்டு கர்வத்தில் வியர்த்தமாகப் போவதுதானா?

கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய அந்த மூக்குத்தி உண்மையில் கல்யாணமாகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்று திரண்ட கண்ணிர்ச் சொட்டு.

வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்?

ஏன்? -

அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். "ஏனா"கவே அவள் அதன்பின் மறைந்து போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/393&oldid=1497778" இலிருந்து மீள்விக்கப்பட்டது