பக்கம்:அவள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360 லா. ச. ராமாமிருதம்

அசலனமாய், மோவாய் நடுவே குழிவு. அகிலா அதிசயித்து நின்றாள். அறியாமல் கைகள் கூப்பிக் கொண்டன. பார்க்கப் பார்க்க இவளிடம் ஏதேதோ புதுப்புது அழகுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியே கல்லாகிவிட்டாளா? பயம் வந்துவிட்டது. "கமலா கமலா!!" அவள் தோளைத் தொட்டு அசைத்தாள்.

விழிகள் மெல்லத் திறந்து, அவளை அணைத்தன.

அகிலாவுக்கு நெஞ்சு விம்மிற்று. "என்ன அம்மா—?" அவள் அவளை அனைத்துக்கொண்டாள். அகிலா பொட்டென உடைந்துபோனாள். விக்கி விக்கி அழுதாள். இத்தனை நாள், தனக்குத்தானே ஒப்புக்கொள்ளாமல், தன்னுள் சிறை கிடந்த தாய்மையின் தவிப்போ? குருக்கள் இல்லை. கோவிலுக்குப் போயிருந்தார்.

அவர் கோவிவிலிருந்து திரும்பியபோது, அவர் முகம் ஒரு தினுசாக மஞ்சள் பூத்து வெளிறிட்டிருந்தது.

"என்ன ஆச்சு?'-அகிலா பதறிப் போனாள்.

அவர் உதடுகள் நடுங்கின. வாய், ஏதோ சொல்ல முயலும் முயற்சியில் தோற்றன.

அவர் கண்கள் அவளை நாடின. அகிலாவின் கேள்விக்குப் பதில் அங்கேதான்...கமலா பொட்டெனச் சிரித்தாள். அவள் விழிகள் கூத்தாடின.

"ஒண்னுமில்லேம்மா, அப்பா அனாவசியமா மிரண்டு போயிருக்கார். காரணம் இங்கிருக்க, எங்கேயோ தேடினால்? சரி சரி, ரொம்பப் பசிக்கிறது. அப்பா, சோத்து மூட்டையை அவிழுங்களேன். அம்மா, எனக்கு ஊட்டி விடறியா...?" சிரித்தாள். பருப்புஞ் சாதத்துலே நெய்யும் சர்க்கரையும் கலந்து. இது போதாது, நிறையப் பிசை. எல்லாருக்கும் சேர்த்துப் பிசை. ஒரே பாத்திரதில்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/404&oldid=1497221" இலிருந்து மீள்விக்கப்பட்டது