பக்கம்:அவள்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமலி 363

"நீங்கள் வேண்டாம், எப்படிப் போனேனோ அப்படிப் போயிடறேன். அப்பா வேணும்னா கோவில் வரை வரட்டும். அவர் சுவாமி சன்னதியில் இருப்பார்."

அகிலா அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றாள். தானே தன்னை விட்டுப்போவது போவிருந்தது.

அப்பாவும் மகளும் இடைவழியில் பேசவில்லை. குருக்கள் நெஞ்சில் ஏதேதோ குழுமிற்று. சொல்லவில்லை.

த்வஜஸ்தம்பத்தண்டை அவரைக் கையமர்த்தினாள். "போயிட்டு வரேனப்பா..."

உள் ப்ரகாரத்துள் ஆவலுடன் ஓடினாள்.

"அப்பா! அப்பா!" அலறல் கேட்டு குருக்கள் உள்ளே ஓடினார்.

"அப்பா, அப்பா! அவரைக் காணோமே!"—இரண்டு கைகளையும் விரித்தவண்ணம் அவள் கதறுகையில், பிரமிக்கத்தக்க அழகில் பொலிந்தாள்.

ஐயர் எட்டிப் பார்த்தார். கர்ப்பக்ருஹத்தில் லிங்கத்தைக் காணோம்.

"ஆண்டவா ஆண்டவா! கதறிக்கொண்டே வெளியே ஓடினாள். குருக்களும் கத்திக்கொண்டே தொடர்ந்தார். "இங்கே லிங்கம் இல்லை. அம்மன் சன்னதியில் மத்யானத்திலிருந்தே மூலவர் இல்லை. ஐயோ என்ன செய்வேன்!"

"என்ன செய்வேன்! என்ன செய்வேன்!" அழுது கொண்டே, தன்னை அழுத்திய துக்கத்தைத் திமிறிக் கொண்டு குருக்கள் விழித்தெழுந்தார். உடல் பூரா வேர்வை ஸ்நானம். கண்ணைக் கசக்கிக்கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். கனவின் பீதி தெளியவில்லை. இருக்கிறாளா? இருந்தஇடத்திலிருந்து எட்டிப்பார்த்தார். கர்ப்பக்ருஹத்தில், சந்து வழி, சாய்வாட்டில், அவள் முகத்தில் நிலாவின் வியாபகத்தில் சிரித்துக்கொண் டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/407&oldid=1497237" இலிருந்து மீள்விக்கப்பட்டது