ஒரு முத்தம்
இரவு ஒரு கனாக் கண்டேன். கனவில் உருவில்லை, ஆளில்லை...அங்கும் இருள்தான். இருளில் ஒரு முத்தம் என் வாய்மேல் பதிந்தது. கனவே அவ்வளவுதான். கனவு கண்டு கலையக்கூட நேரமில்லை. அதனால் நனவா என்று நினைத்தால் அதனினும் அசட்டுத்தனம் இல்லை.
நனவாயிக்கலாகாதா? வெட்கம் கெட்ட அசட்டு ஏக்கம். எப்படியிருக்க முடியும்? யாராயிருக்கலாம்? நினைக்கக்கூட வழியில்லை. பிரம்மச்சாரிக் கட்டை. ஹாஸ்டல் வாசம் சகவாசங்கள் ஏற்கெனவே மட்டு அதிலும் அந்த சைடு கிடையாது. சங்கோசம். ஆனால், முத்தம் தந்தவளை (ஏன் எப்பவுமே அவள்?) மனம் உருக் கூட்டப் பார்க்கிறது முடியாத காரியம். தெரிகிறது, ஆனாலும்-You fool! கனவுதானா எனச் சந்தேகிக்கும்படி முத்தத்தின் அழுத்தமான பதிவு, அதரங்களில் கசிந்த ஈரம், அதே சமயத்தில் அந்தக் கதகதப்பான மெத்து—உடல் சிலிர்க்கிறது. அதுவே தான் என்னை எழுப்பி விட்டதோ என்னவோ?
காலை விழிப்பிலேயே (விழிப்பா, விழிப்பிலா? ஒரு அனுஸ்வரத்தில் ராகமே மாறும்போல பொருள் நயம் விளிம்பில் நலுங்குகிறது) ஒரு அழகுதான். கண் வைத்ததும் சித்திரம் உயிர்க்கின்றது, இமைச் சிமிழ்கள், இதழ்கள்