பக்கம்:அவள்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முத்தம் 365

விரிவது போலும் மெ.து...வா...ய்த் திறக்கின்றன. உடனேயே கண்ணுக்குப் பட்ட காக்ஷியுடன் ஸ்மரணை கலக்கும் ஜாதுவில் இன்றைய ஓவியம் உருக்கூட, அவ்வப் போது அதன் சாயங்கள் தோயத் தலைப்படுகின்றன.

இதழ்களில் தோய்ந்த கனவின் சாயத்தின் ஈரம் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் இல்லை.

ஜன்னலுக்கு வெளியே, விழிக்கு மெத்தடமாய்த் துல்லிய நீலத்தில் வான் மிதக்கிறது. நீலத்தில் தொடங்கி நேரம் ஏற ஏற வானத்தில் ஹோலி. மஞ்சள், ஊதா, சிவப்பு என கெட்டி சாயங்கள். அவைகளிலிருந்து கடுகு, தக்காளி, வெங்காயம், மஜந்தா ரோஸ், குங்குமம், ஆரஞ்ச் என மறு சாயங்கள் மேலும் மேலும் கொப்புளித்த வண்ணம் ஒரே வர்ண ரகளை. இன்று சூர்ய ரதப் புறப்பாடு அமர்க்களம் போல்.

நெஞ்சு துளும்புகிறது;

முத்தம் தந்த செளந்தர்யலகரி.

அம்மா தந்த முத்தம் நினைவின் அலைகளில் எழுகின்றது. எப்பவோ தோன்றி ஆழத்தில் எங்கேயோ புதைந்து இன்று மேலெழ அதன் வேளை.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாயும், அம்மா அவளும் எங்களுடன் ஒரு குழந்தை. தொட்டதற்கெல்லாம் சிரிப்பாள். பால் பொங்கினால்—அதற்கு அன்று அப்படிச் சிரித்தாள். அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. காரியம் தலைக்குமேல் கிடக்கும் போட்டது போட்டபடி. எங்களோடு விளையாட வந்து விடுவாள். தாயக்கட்டான், புளியங்கொட்டை பல்லாங் குழி, கண்ணாமூச்சி, விடுகதை, கதை சொல்லல்...

'ஆமாம், காரியம் என்னிக்கு இல்லை? செஞ்சாலும் ஓயப் போறதில்லை. இந்த சந்தோஷம் கிடைக்குமா?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/409&oldid=1497245" இலிருந்து மீள்விக்கப்பட்டது